கோவை, வெள்ளலூர் ஹவுசிங் யூனிட் சேர்ந்தவர் நவீன். இவர் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்து வந்தார். இவரது நண்பர் நிர்மல் குமார் இவரும் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் நவீனுக்கு உதவியாக இருந்து உள்ளார். இதில் அவர்கள் லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து உள்ளனர்.

இதனால் அவர்களுக்கும் சிலருக்கும் இடையே பண விவகாரத்தில் விரோதம் இருந்து உள்ளது. இந்நிலையில் நவீன், நிர்மல் குமார் ஆகியோரை கடத்தி ஈரோடு பெருந்துறை பகுதியில் அடைத்து வைத்து ரூபாய் 50 லட்சம் கொடுத்தால் தான் விடுவிப்போம் என்று உறவினர்களுக்கு போன் செய்து மிரட்டல் விடுத்து உள்ளனர்.
இது குறித்து புகாரின் பேரில் போத்தனூர் காவல் ஆய்வாளர் அசோக்குமார் தலைமையில் தனிப்படையினர் இரண்டு பேரையும் மீட்கவும் கடத்தல் கும்பலை கைது செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி கடத்தப்பட்ட இரண்டு பேரின் குடும்பத்தினரையும் வரவழைத்து கடத்தல் ஆசாமி பேசிய எண்ணில் பேச வைத்தனர்.

அவர்கள் போலீசார் கூறியபடி அந்த கும்பலை செல்போனில் தொடர்பு கொண்டு நீங்கள் கேட்ட பணத்தை தயார் செய்து விட்டோம் எங்கு ? வந்து தர வேண்டும் என்றும் கேட்டனர். அதற்கு அந்த கும்பல் திருப்பூர் பேருந்து நிலையம் அருகே வந்தால் அவர்கள் வந்து பெற்றுக் கொள்வதாக தெரிவித்தனர். அதன்படி அவர்கள் பணத்தை எடுத்துக் கொண்டு அந்த கும்பல் கூறிய இடத்திற்கு சென்றனர். அவர்களுடன் காவல் துறையினரும் சாதாரண உடையில் சென்று கண்காணித்தனர்.
அப்பொழுது அவர்களிடம் பணம் வாங்குவதற்காக இரண்டு பேர் வந்தனர். உடனே போலீசார் விரைந்து சென்று அந்த இரண்டு பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் திருப்பூர் நல்லூர் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலர்களாக பணியாற்றும் ஆனந்தன், மோகன் என்பதும், திருப்பூரைச் சேர்ந்த ராம்குமார், காளிதாஸ் ஆகியோர் கூறியதன் அடிப்படையில் கடத்தலுக்கு உதவியது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து திருப்பூரில் பதுங்கி இருந்த காளிதாஸ், ராம்குமார் ஆகியோரே போலீசார் பிடித்தனர். கடத்தப்பட்ட நவீன், நிர்மல் குமார் ஆகியோரை போலீசார் மீட்டனர்.
இதை அடுத்து காவலர்கள் ஆனந்தன், மோகன் மற்றும் ராம்குமார், காளிதாஸ் ஆகிய நான்கு பேர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த கடத்தலுக்கு மூலதனமாக செயல்பட்ட தீர்ப்புரைச் சேர்ந்த கருப்பச்சாமியை, கோவை போத்தனூர் போலீசார் கைது செய்து உள்ளனர்.

காவல்துறை பிடிக்கும் போது தப்ப முயன்ற கருப்பசாமிக்கு கால் முறிந்தது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கு இடையே கைதான காவலர்கள் ஆனந்தன், மோகன் ஆகிய இரண்டு பேரையும் பணியிடை நீக்கம் செய்து திருப்பூர் காவல் ஆணையர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
கடத்தல் வழக்கில் தொடர்புடைய காவலர்கள் இரண்டு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





