• Fri. May 3rd, 2024

ராமநாதபுரம் தொகுதியில் ஒரே இன்சியலுடன் இரண்டு வேட்பாளர்கள்

Byவிஷா

Mar 26, 2024

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் சுயேட்சையாக களமிறங்கும் நிலையில், அதே இன்சியலுடன் கூடிய மற்றொரு வேட்பாளரும் சுயேட்சையாக களமிறங்குவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே ஏற்பட்ட உச்சக்கட்ட மோதலை அடுத்து ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதனையடுத்து அதிமுகவை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்ற முடிவில் ஓபிஎஸ் நடத்தி வரும் சட்டப்போராட்டங்களில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறார். ஆகையால், இனி நீதிமன்றத்தை நம்பி எந்த பயனுமில்லை. மக்களவை சந்திப்பதே இதற்கு சரியான தீர்வு என்ற முடிவுக்கு வந்துள்ளார்.
இந்நிலையில், பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஓபிஎஸ்-க்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இழந்த செல்வாக்கை மீட்க வேண்டும் என்றால் வேறு யாரையும் வேட்பாளராக நிறுத்தாமல் தானே நேரடியாக களமிறங்கினால் தான் சரியாக இருக்கும் என்ற முடிவில் ஓபிஎஸ் ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் தனி சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான விஷ்ணு சந்திரனிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கலுக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், சின்னங்களை காட்டிலும் வேட்பாளர்களின் கடந்த கால அரசியல் வரலாறு முக்கியம். கடந்த காலங்களில் எவ்வளவு மக்கள் பணிகளை செய்துள்ளார் என்பதை பொறுத்து வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன் என்றார். இந்நிலையில், சுயேட்சை வேட்பாளரான முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் களமிறங்கிய நிலையில் புதிய தலைவலி ஒன்று ஏற்பட்டுள்ளது.
அதாவது பொதுவாக ஏதேனும் தொகுதியில் முக்கிய தலைவர்கள் போட்டியிட்டால், அவரின் பெயர் கொண்ட பலரும் போட்டியிடுவது வழக்கம். ஆனால், அதே இனிசியலுடன் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரிலேயே மற்றொருவரும் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட உசிலம்பட்டி அருகே மேக்கிழார்பட்டி என்ற ஊரைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சுயேட்சை சின்னத்தில் நிற்கும் நிலையில், இன்னொரு ஓ.பன்னீர்செல்வமும் சுயேட்சையாக களமிறங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *