சிவகாசி லட்சுமி நகரில் வசிக்கும் தங்க மாரியப்பன்- கவிதா தம்பதியினர். தங்க மாரியப்பன் கட்டிடப் பொறியாளராக உள்ளார். இந்தத் தம்பதியரின் மகன்கள் இரட்டையர்களான துரைராஜு ராமன் மற்றும் துரை லட்சுமணன் இருவரும் சாட்சியாபுரம் வி.எஸ்.கே. டி நாடார் குருகுல மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் பயின்று வருகின்றனர்.

கடந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தம்பி துரை லட்சுமணன் கணக்கு மற்றும் அறிவியல் பாடப் பிரிவுகளில் தலா 100- மதிப்பெண்களும், தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் தலா 99- மதிப்பெண்களும் எடுத்து ஆக மொத்தம் 497- மதிப்பெண்களுடன் விருதுநகர் மாவட்டத்திலேயே முதலிடமும், மாநில அளவில் முன்னணியிலும் உள்ளார்.

இவருடன் ஒரே வகுப்பறையில் பயின்ற இரட்டையர்களில் மூத்தவரான துரை ராஜுராமன் கணக்கு மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் தலா 100 மதிப்பெண்களும், தமிழில் 97, ஆங்கிலத்தில் 99, சமூகஅறிவியலில் 98 மதிப்பெண்களுடன் மொத்தம் 494- மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

இரட்டை சகோதரர்களின் சாதனையை பள்ளி நிர்வாகத்தினரும், ஆசிரிய, ஆசிரியைகளும், சக மாணவ, மாணவிகளும் பாராட்டி, இனிப்புகள் வழங்கி, தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். மென்மேலும் பள்ளி உயர் படிப்புகளையும், கல்லூரி பட்டப் படிப்புகளையும் படித்து எதிர்காலத்தில் தனது தந்தையைப் போலவே கட்டிடப் பொறியாளராவதே தனது எதிர்கால லட்சியமென சாதனை மாணவர் இளையவரான துரைலட்சுமணன் தெரிவித்துள்ளார்.




