ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வர காரணம் அதிமுக இரண்டாக பிளவுபட்டது தான் என்று அக்கட்சியை சேர்ந்தவர்களே பேசத் தொடங்கிவிட்டனர். இந்நிலையில் தேனி மாவட்டம் கைலாசபட்டியில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு சொந்தமான பண்ணை வீட்டில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது அதிமுக-அமமுக ஒன்றிணைக்கும் வரை அதிமுகவால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என தொண்டர்கள் தெரிவித்தனர்.
எனவே உடனடியாக அமமுகவை அதிமுகவுடன் இணைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இதனைத்தொடர்ந்து வருகிற 5 ஆம் தேதி சசிகலாவை அதிமுகவில் இணைப்பது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி தலைமைக்கு அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது. . தற்போது தேனி மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவு மற்ற மாவட்டங்களிலும் தீர்மானமாக நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கட்சியில் தன்னை சேர்ப்பது குறித்த அதிமுகவின் முடிவுக்கு நான் காத்திருக்கிறேன் என டிடிவி தினகரன் கூறியுள்ளார். அதிமுகவில் உள்ள அனைவருமே நல்ல நண்பர்கள் என்ற அவர் ஒட்டுமொத்த அதிமுகவின் முடிவு வந்த பின்பு ஆலோசித்து தன்னுடைய முடிவை அறிவிப்பேன் என தெரிவித்துள்ளார்.