கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் கார்த்திகை மாத சமுத்திரத் தீர்த்த ஆரத்தி வழிபாடு, திரளான பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் காசி, ராமேஸ்வரம் போன்று மகா சமுத்திரத் தீர்த்த ஆரத்தி வழிபாடு கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கியது. அதைத் தொடர்ந்து மாதந்தோறும் பவுர்ணமி தினத்தில் இந்த ஆரத்தி வழிபாடு நடைபெற்று வருகிறது.
கன்னியாகுமரி மாவட்ட இந்து திருத்தொண்டர் பேரவை சார்பில் நடைபெறும் இந்த ஆரத்தி வழிபாட்டின் 3-வது நிகழ்வு கார்த்திகை மாத பவுர்ணமியான நேற்று (18-ம் தேதி) இரவில் நடந்தது. முதலில் முக்கடல் சங்கமக் கடற்கரையில் பரசுராமர் விநாயகர் கோயில் முன்பு பக்தர்கள் சங்கமிக்கும் நிகழ்வு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சங்குநாதம் மூன்று முறை ஒலிக்கச் செய்யப்பட்டது.நிகழ்ச்சியில் சமுத்திர அபிஷேகம், சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. பின்னர் ஐந்து அடுக்குத் தீபம் ஏற்றி கடலை நோக்கி சமுத்திரத்திற்கு ஆரத்தி எடுக்கப்பட்டது. மகா சமுத்திர ஆரத்தி வழிபாட்டிற்கு வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரம சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ் தலைமை வகித்தார். ஆரத்தி வழிபாட்டை எம்எல்ஏக்கள் தளவாய்சுந்தரம், எம்.ஆர்.காந்தி ஆகியோர் தீபம் ஏற்றித் தொடங்கி வைத்தனர்.
குமரி மாவட்ட இந்து திருத்தொண்டர் பேரவைத் தலைவர் ராஜகோபால், குமரி மாவட்ட வள்ளலார் பேரவைத் தலைவர் சுவாமி பத்மேந்திரா மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். கரோனா ஊரடங்கு தளர்வு செய்யப்பட்ட நிலையில் முக்கடல் சங்கம மகா சமுத்திர ஆரத்தி வழிபாட்டில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி கன்னியாகுமரிக்குச் சுற்றுலா வந்திருந்த பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் திரளானோர் கலந்துகொண்டனர்.