• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்: த.வெ.க தலைவர் விஜய் ட்விட்

Byவிஷா

Jan 25, 2025

இன்று வீரவணக்கநாளை முன்னிட்டு, மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்திய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் ‘நம் உயிரனைய, ஒப்பற்ற தாய்மொழி தமிழ் காக்க இந்நாளில் உறுதி ஏற்போம். தமிழ் வாழ்க!’ என ட்விட் செய்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதியன்று, மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இன்றைய நாளில் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தி சிறை சென்று உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகள் நடராசன், தாளமுத்து ஆகியோர் நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்துவது வழக்கம். அந்த வகையில் சென்னை மூலக்கொத்தளம் பகுதியில் மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராசன் ஆகியோரின் நினைவிடம் 32 லட்சம் செலவில் தமிழக அரசால் புதுப்பிக்கப்பட்ட நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நினைவிடத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து, மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்திய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய், தமது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில், மொழிப்போர் தியாகிகளின் நினைவைப் போற்றி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்..,
“உலகில், தன் தாய்மொழி காக்க, தன்னெழுச்சியுடன் போராடிக்கொண்டே இருக்கும் இனம், தமிழினம். தமிழ் காக்கக் களமாடி உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம். உயிர்நீத்த தியாகிகளின் நினைவைப் போற்றி வணங்கி, நம் உயிரனைய, ஒப்பற்ற தாய்மொழி தமிழ் காக்க இந்நாளில் உறுதி ஏற்போம். தமிழ் வாழ்க!” எனத் தெரிவித்துள்ளார்.