• Sun. Apr 28th, 2024

போக்குவரத்து ஊழியர்கள் நாளை பணிக்கு வர உத்தரவு..!

Byவிஷா

Jan 8, 2024

நாளை முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், நாளை பணிக்கு வரவேண்டும் என மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வூதிய அகவிலைப்படி உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் வருகிற 9-ம் தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர். ஊழியர்கள், வேலை நிறுத்தத்தில் பங்கேற்காமல் பணிக்கு வர வேண்டும் என போக்குவரத்துத்துறை உத்தரவிட்டது.
மேலும், வேலை நிறுத்தம் செய்வது பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், போக்குவரத்து பணியாளர்கள் அனைவரும் நாளை 9-ம் தேதி கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என்று மாநகர போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குனர் அறிவித்துள்ளார்.
இது குறித்து சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது..,
மாநகரப் போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் உட்பட போக்குவரத்து பணியாளர்கள் அனைவரும் நாளை 9-ம் தேதி கட்டாயம் பணிக்கு வர வேண்டும். போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்திருக்கும் நிலையில், யாருக்கும் விடுப்பு அல்லது ஓய்வு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *