பெண் ஆய்வாளர்களுக்கு போக்சோ வழக்குகளைக் கையாள்வது குறித்தான இரண்டு நாள் பயிற்சி வகுப்பு வேப்பேரியில் உள்ள சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்தப் பயிற்சி வகுப்பை, சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையர் ராதிகா தொடங்கி வைத்தார். இதில், மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், போலீஸார் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி பேராசிரியர் டாக்டர் மணிகண்ட ராஜூ கலந்துகொண்டு ‘போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மருத்துவ மாதிரிகளை எவ்வாறு சேகரித்து பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும், வழக்குக்கு தேவையான கேள்விகள் எவ்வாறு இருக்க வேண்டும்?’ என்பது குறித்து விளக்கமளித்தார்.
அதைத்தொடர்ந்து பேசிய தடய அறிவியல் துறை உதவி இயக்குநர் டாக்டர் சி.பவானி, ‘போக்சோ வழக்குகளில் சம்பவ இடத்தில் இருந்து கைப்பற்ற வேண்டிய தடயங்களை எவ்வாறு சேகரிக்க வேண்டும், சேகரித்ததை எவ்வாறு தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்ப வேண்டும்’’ என்பது பற்றி எடுத்துக் கூறினார்.
போக்சோ சிறப்பு நீதிமன்ற அரசு வழக்கறிஞர் அனிதா, புலன் விசாரணை அதிகாரி கையாள வேண்டிய சட்ட விதிமுறைகள் மற்றும் குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை பெற்றுக் கொடுக்க போலீஸார் செய்ய வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார்.
மேலும், பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளுக்கு எவ்வாறு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு கொடுப்பது, குழந்தைகளின் எதிர்கால நலன் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.