• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நாளை சந்திர கிரகணம்: வெறும் கண்ணால் பார்க்கலாம்

ByA.Tamilselvan

Nov 7, 2022

நாளை ஏற்படும் சந்திர கிரகணத்தை கிழக்கு வானில் வெறும் கண்ணால் பார்க்கலாம் என்று சென்னை பிர்லா கோளரங்க இயக்குனர் சவுந்தரராஜ பெருமாள் தெரிவித்துள்ளார்.
சென்னை பிர்லா கோளரங்க இயக்குனர் (பொறுப்பு) சவுந்திரராஜ பெருமாள் கூறியதாவது; “பூமியின் நிழலில் நிலவு கடந்து செல்லும் போது அது சூரியனின் நேரடியான ஒளியைப் பெற முடியாமல் விடுகிறது. இதனால், நிலவின் ஒளி குன்றுவதை சந்திர கிரகணம் என்கிறோம். சந்திர கிரகணத்தின் போது சூரியனின் எதிர் திசையில் நிலவு வருவதால், சந்திர கிரகணம் பவுர்ணமியின் போதுதான் தெரியும்.
நிலவு முழுமையாக பூமியின் முழு நிழல் பகுதியில் மறைவது முழு சந்திர கிரகணமாகும். பகுதி சந்திர கிரகணத்தின் போது நிலவின் ஒரு பகுதியில் முழு நிழல் பகுதி படியும். எனவே முழு நிழல் பகுதியில் சூரிய ஒளி நேரடியாக படிவதில்லை. எனவே நிலவின் ஒரு பகுதி அதிக இருளாகவும், மற்ற பகுதிகள் குறைந்த இருளாகவும் காணப்படும். இது பகுதி சந்திர கிரகணமாகும். பூமியின் நிழல் பெரிய பரப்பில் விழுவதால் சந்திர கிரகணத்தை பூமியின் பெரும்பான்மையான பகுதிகளில் இருந்து ஒரே நேரத்தில் காணலாம். நாளை (நவ.8-ம் தேதி) ஏற்படும் சந்திர கிரகணம் இந்திய நேரப்படி பகல் 2.39 மணி முதல் மாலை 6.19 மணி வரை நீடிக்கிறது. இதில் முழு சந்திர கிரகணம் 3.46 மணியில் இருந்து மாலை 5.11 மணி வரை நடக்கும். உச்சபட்சமாக 4.30 மணிக்கு ஏற்படும். மாலை 5.36 மணிக்கு சூரியன் மறையும். அதற்கு பிறகு மாலை 5.38-க்கு தான் சந்திரன் உதயமாகிறது.
எனவே முழு கிரகணத்தை காண இயலாது. ஆனால் 5.38 மணியில் இருந்து மாலை 6.11 மணி வரை சுமார் 40 நிமிடங்கள் வரை கிழக்கு தொடுவானில் பகுதி கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம். சந்திர கிரகணத்தை காண தொலைநோக்கி போன்ற கருவிகளோ, கண்களைக் காத்துக்கொள்ள தனிப்பட்ட கவனமோ தேவையில்லை. ஆசியா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, வடக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் சில பகுதிகள் மற்றும் தென் அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து தெரியும். மீண்டும் அடுத்த ஆண்டு அக்டோபர் 28-ம் தேதி தமிழகத்தில் இது போன்ற பகுதி சந்திர கிரகணத்தை காணலாம்” என்று தெரிவித்தார்.