

தேர்தல் பணிகளில் ஈடுபடுபவர்கள் தபால் வாக்கு செலுத்த நாளை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை மறுநாள் மாலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு தெரிவித்துள்ளார். ஏப்ரல் 19ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை நேர்மையாகவும், பாதுகாப்பாகவும் நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த தயாராக இருக்கிறோம்.
மக்களவை தேர்தல் தொடர்பாக சிவிஜில் மூலம் இதுவரை 4190க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. தமிழகம் முழுவதும் பூத் சிலிப் வழங்கும் பணி 92.80மூ நிறைவடைந்துள்ளது. சென்னை உள்பட பல இடங்களில் பூத் சிலிப்புகள் இன்னும் வழங்கப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். பூத் சிலிப் இல்லை என்றாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்களிக்கலாம். நாளை மாலையுடன் பூத் சிலிப் கொடுக்கும் பணி நிறைவடையும். பூத் சிலிப் கிடைக்காதவர்கள் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுபட்டவர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்குவது குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரி நடவடிக்கை எடுத்து வருகிறார்.
தேர்தல் பணியில் உள்ளோர் தபால் மூலம் வாக்களிக்க நாளை கடைசிநாள். தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி தபால் வாக்குகளை தபால் மூலமாக அனுப்ப முடியாது அதே போல் தேர்தல்நாளில் 19ம் தேதி விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். 19ம் தேதி விடுமுறை இல்லை எனத் தெரிந்தால் 18ம் தேதியே புகார் கொடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். தேர்தல் ஆணையத்தின் 1950 என்ற புகார் எண்ணில் ஊழியர்கள் புகார் அளிக்கலாம். 17ம் தேதி மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரை முடிவடைய இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

