ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக அம்மாநிலங்களில் இருந்து சென்னைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளதைத் தொடர்ந்து தக்காளியின் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.
தக்காளி விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடனேயே காணப்படுகிறது. கடந்த ஜூன் மாத இறுதியில் ஒரு கிலோ தக்காளி சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ரூ.7 முதல் ரூ.15 வரை விற்பனை ஆனது. வெளி மார்க்கெட் மற்றும் சில்லரை கடைகளில் ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்டதை பார்க்க முடிந்தது.
இம்மாத ஆரம்பத்தில் கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.35 முதல் ரூ.50 வரையிலும், வெளி மார்க்கெட்டுகளில் ரூ.60 வரையிலும் விற்பனை ஆனது. அதன்பிறகு, விலை சற்று குறையத் தொடங்கியது. அதன்படி, கடந்த 17-ந் தேதி ஒரு கிலோ தக்காளி ரூ.30-க்கு கீழே வந்து விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் தற்போது மீண்டும் விலை தக்காளி விலை ஏறுமுகத்தை நோக்கி செல்கிறது. நேற்று முன்தினம் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை உயர்ந்து காணப்பட்ட தக்காளி விலை நேற்று மேலும் கிலோவுக்கு ரூ.10 அதிகரித்து அதிர்ச்சியளித்தது. கடந்த 2 நாட்களில் மட்டும் தக்காளி கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.25 வரை சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிலேயே அதிகரித்திருந்தது.
வெளி மார்க்கெட் மற்றும் சில்லரை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து சென்னைக்கு அதிகளவில் தக்காளி வரத்து இருக்கும் நிலையில், அம்மாநிலங்களில் தென்மேற்கு பருவமழையால் அதிக மழை பதிவாகி வருவதால் விளைச்சல் பாதிக்கப்பட்டு தக்காளி விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தக்காளி விலை மீண்டும் உயர்வு
