• Thu. May 2nd, 2024

இரட்டை இலைச்சின்னம் வழக்கில் இன்று தீர்ப்பு

Byவிஷா

Mar 16, 2024

அதிமுகவில் இரட்டைஇலைச்சின்னம் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கா, ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கா என்பது தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக இருக்கிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டு பிரிவுகளாக பிரிந்தது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு என இருவருமே இரட்டை இலை சின்னத்திற்கும், அதிமுக கட்சிக்கும் உரிமை கோரினர். உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என பல்வேறு மையங்களில் இவர்கள் முறையிட்டனர். இதில் பெரும்பாலும் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கே வெற்றி கிட்டியது.

இருந்தும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தற்போது வரையில் அதிமுக அங்கீகாரம் மற்றும் இரட்டை இலை சின்னத்திற்காக போராடி வருகின்றனர். முன்னதாக ஓபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்திடம் அதிமுகவின் கட்சி மற்றும் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு பயன்படுத்தக்கூடாது என்றும், தேர்தல் வேட்பாளர் மனுவில் பொதுச்செயலாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்திட அனுமதிக்ககூடாது என்றும் பல்வேறு கோரிக்கைகளை தேர்தல் ஆணையத்திடம் ஒ.பன்னீர்செல்வம் புகார் அளித்து உள்ளது.

ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழங்கியுள்ள இந்த புகார்கள் குறித்து இதுவரை தேர்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி வழக்கு தொடர்ந்து உள்ளார்.

அந்த வழக்கு விசாரணையில், இரட்டை இலை சின்னம், அதிமுக கட்சி தொடர்பாக நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளோம். ஆனால் புகார் குறித்து தேர்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே தேர்தல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட கோரி வாதிடப்பட்டது.

அதே சமயத்தில், இபிஎஸ் தரப்பில் வாதிடுகையில் அதிமுக ஒரே அணியாக தான் உள்ளது. எங்களுக்கே பெரும்பான்மை உள்ளது. யாருக்கு பெரும்பான்மை இருக்கிறதோ அவர்களிடம் தான் கட்சியும் சின்னமும் தேர்தல் ஆணையத்தால் கொடுக்கப்படும். இந்த விவகாரத்தில் ஏற்கனவே தேர்தல் ஆணையம் எங்களுக்கு அங்கீகாரம் வழங்கி உள்ளது என்று வாதிட்டனர்.

இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிபதி சச்சின் தாத்தா இந்த வழக்கு மீதான தீர்ப்பை இன்று பிற்பகல் அறிவிக்க உள்ளார். இரட்டை இலை சின்னம், அதிமுக கட்சி தொடர்பான முக்கிய வழக்கில் தீர்ப்பை எதிர்நோக்கி எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *