

சுவாமி விவேகானந்தர் ஆன்மீக தலைவர்களுள் ஒருவராக தலைச்சிறந்து விளங்கியவர். அவர் ராமகிருஷ்ணா பரமஹம்சரின் தலைமை சீடராக திகழ்ந்தவர். மேலும் ‘ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடம்’ மற்றும் ஸ்ரீ ‘ராமகிருஷ்ணா மிஷன்’ போன்ற அமைப்புகளையும் நிறுவியவர். சுவாமி விவேகானந்தர் அவர்கள், ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காகவும், உதவியற்றோர் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் நலனுக்காகவும், நாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். ஆங்கிலேயர் ஆட்சியில், இருண்டுக் கிடந்த இந்தியாவிற்கு ஒரு கலங்கரை விளக்கமாகவும், இந்தியர்கள் மத்தியில் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக தன்னம்பிக்கை என்னும் விதையையும் விதைத்தார். அவரது ஆணித்தரமான, முத்துப் போன்ற வார்த்தைகளும், பிரமாதமான பேச்சுத்திறனும் உறங்கிக் கொண்டிருந்த தேசிய உணர்வைத் தூண்டியது. இளைஞர்கள் அவரது பேச்சால் மிகவும் ஈர்க்கப்பட்டனர்.
இந்திய மக்களுக்கு ஆன்மீக ஞானஒளியை புகட்டுவதில் பெரும் பங்கு வகித்து, வேதாந்தத் தத்துவங்களை மேற்கிந்தியா முழுவதும் பரப்பி, ஏழை எளியோருக்கு சேவை செய்ய வேண்டுமென்ற உன்னத எண்ணங்களோடு செயல்பட்டவர் சுவாமி விவேகானந்தர். இன்று, அவருடைய நினைவு நாள். அவருடைய உயரிய சிந்தனைகளை இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்லி அவர் புகழைப் போற்றுவோம்.

