• Fri. May 10th, 2024

வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்துக்கு..,வெளி மாநில பறவைகள் வருகை தொடக்கம்..!

ByG.Suresh

Nov 9, 2023

சிவகங்கை மாவட்டம் வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்திற்கு வெளிமாநில பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கொள்ளுகுடிப்பட்டி வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் நவம்பர் மாதம் தொடக்கத்தில் இருந்து மார்ச் மாத இறுதிவரை சுமார் ஐந்து மாதங்கள் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து முக்குளிப்பான், கூழைக்கடா, பெரிய நீர்காகம், பாம்பு தாரா, குளத்துக் கொக்கு, மடையான், உண்ணிக் கொக்கு, பக்கா, செங்கால் நாரை, நத்தை கொத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், கரி நீல அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், மார்களியன், ஊசி வால் வாத்து, புள்ளி அழகு வாத்து, நீலச்சிறவி, பூனைப்பருந்து, வெண்மார்பூ மின் கொத்தி உள்ளிட்ட பல்வேறு வகையான பறவை இனங்கள் பருவமழை காலங்களில் இச்சரணாலயத்திற்கு இன பெருக்கத்திற்காக வருகை புரிவது வழக்கமாகும்.
தற்சமயம் இந்த ஆண்டு முதல் கட்டமாக வெளி மாநில பறவைகளான கொக்கு, நாரை, உன்னி கொக்கு, முக்குளிப்பான், குளத்து கொக்கு போன்ற பறவை இனங்களே வருகை தந்துள்ளது. இது குறித்து வன அலுவலர் தெரிவிக்கையில் பொதுவாக இங்கு இனப்பெருக்கத்திற்காக வருகை புரியும் பறவை இனங்கள் உடனடியாக தங்களது சேர்க்கையில் ஈடுபடுவதில்லை. மாறாக தட்பவெப்ப சூழ்நிலை, இறைதேடல், மற்றும் தங்கும்இடம் அமைத்தல் போன்றவற்றை தேர்வு செய்து அதன் பின்னரே அடைகாக்கும் நிலைக்கு செல்லும். இந்த ஆண்டு பருவமழை காலம் சற்று காலதாமதமாக தொடங்கியுள்ள காரணத்தினால் வெளி மாநில பறவைகள் மட்டும் தற்சமயம் வருகை புரிந்து அதற்கான சூழ்நிலையை தேர்வு செய்து வருகிறது.
மேலும் வர இருக்கின்ற ஓரிரு வாரங்களில் வெளிநாடுகளில் இருந்தும் வரும் பறவை இனங்களின் வருகை முழுமையாக வரக்கூடும் என்று தெரிவித்தார். சிவகங்கை மாவட்டத்திலேயே ஒரே ஒரு சரணாலயமாக இருக்கக்கூடிய இந்த பறவைகள் சரணாலயத்தை சுற்றிலும் தற்சமயம் சீமை கருவேலை மரங்களும் நாட்டு கருவேலை மரங்களும் இருந்து வருகிறது.எனவே இவற்றை அப்புறப்படுத்தி வரும் காலகட்டங்களில் இங்கு வரும் பறவை இனங்கள் தங்களின் இரைக்காக வெகு தூரம் செல்லாமல் இருப்பதை தவிர்க்க பறவைகளுக்கு பலன் தரக்கூடிய பழ வகை மரக்கன்றுகளையும், குறுங்காடுகள், அடர்ந்த வனங்கள் போன்றவற்றை இப்பகுதிகளில் அமைத்து ஒரு சாதகமான சூழ்நிலையை இப்பறவை இனங்களுக்கு மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் சுற்றுலா பயணிகளும் கூறி வருகின்றனர்.
கடந்த 1977 முதல் தமிழக அரசின் பாதுகாக்கப்பட்ட பறவைகள் சரணாலயமாக இருந்து வரும் இந்தப் இந்த சரணாலயத்தை சுற்றுலா பயணிகளைi கவரும் விதத்தில் இதனை மேம்படுத்தி அவர்களின் வருகையை அதிகப்படுத்தும் நடவடிக்கையில் துறை சார்ந்த அதிகாரிகள் அதற்கான பணியினை மேற்கொள்ள வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது என்பத குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *