• Thu. May 2nd, 2024

அனந்தபுரி விரைவு ரயிலின் பயண நேரத்தைக் குறைக்க..,விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை..!

சென்னையில் இருந்து கொல்லம் செல்லும் அனந்தபுரி விரைவு ரயிலின் பயண நேரத்தைக் குறைக்க வேண்டும் என கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் இருந்து கொல்லம் செல்லும் அனந்தபுரி விரைவு ரயில் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் சென்னை செல்வதற்கு ஒரு முக்கியமான ரயில். ஆனால் இந்த ரயில் காலை நேரம் மிக தாமதமாக நாகர்கோவில், இரணியல் மற்றும் குழித்துறை ரயில் நிலையங்களை வந்தடைந்தது. இதனால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். பயண நேரத்தை குறைக்க வேண்டும் என்ற பொது மக்களின் கோரிக்கையை ஏற்று கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அவர்கள் ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்திருந்த நிலையில் ரயில்வே நிர்வாகம் பயண நேரத்தை தற்போது குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
அனந்தபுரி ரயில் சென்னையில் இருந்து இரவு 8 மணி 10 நிமிடத்திற்கு புறப்பட்டு திருநெல்வேலி ஆரல்வாய்மொழி போன்ற இடங்களில் அதிக நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு காலை 9 மணிக்கு மேல் நாகர்கோவில் டவுன் நிலையம் வந்து கொண்டிருந்தது. இது பயணிகளுக்கு மிகவும் சிரமத்தை கொடுத்து கொடுத்து வந்தது.
இது குறித்து கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அவர்கள் அளித்த மனுவில்..,
அனந்தபுரி ரயில் வழியில் மற்ற ரயில்கள் கடந்து செல்வதற்காக நிறுத்தி வைப்பதை சுட்டிக்காட்டி அவற்றை தவிர்க்கும் வண்ணம் ரயில்களின் அட்டவணையை சீர் செய்ய வேண்டுமென கேட்டு கொண்டார். மேலும் அனந்தபுரி ரயிலின் வேகத்தை அதிகப்படுத்தி இயக்க வலியுறுத்தியும் கடிதம் எழுதி இருந்தார். இதை கருத்தில் கொண்ட ரயில்வே நிர்வாகம் வருகின்ற ஜூலை 7 முதல் அனந்தபுரி ரயில் நாகர்கோவில் டவுன் நிலையத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக 8.07 மணிக்கு வந்தடைந்து 8.12 மணிக்கு புறப்பட்டு செல்லும். அது போல இரணியல் மற்றும் குழித்துறை ரயில் நிலையங்களுக்கு தற்போது உள்ளதை விட 30 நிமிடங்கள் முன்னதாக சென்றடையும். இந்த ரயில் 10.10 மணிக்கு திருவனந்தபுரம் சென்று சேரும் என அறிவித்துள்ளது.
பொதுமக்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு இந்த நேர மாற்றத்தை கொண்டு வந்த ரயில்வே நிர்வாகத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் திரு விஜய் வசந்த் அவர்கள் ரயில் பயணிகள் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *