செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு தாம்பரத்தில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், போதைப் பொருட்களுக்கு எதிராக 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது.

செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில், தாம்பரம் கிழக்கு பகுதியில் இன்று காலை 6.30 மணிக்கு இந்த மாரத்தான் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் அப்துல் சமது தலைமை தாங்க, சேலையூர் காவல் நிலைய காவலர்கள் முன்னிலையில் கொடி அசைத்து மாரத்தானை தொடங்கி வைத்தார்.

பாத்திமா சர்ச் அருகே தொடங்கிய இந்த ஓட்டம், பூண்டி பஜார் சிக்னல் வரை சென்று மீண்டும் சர்ச் அருகே நிறைவடைந்தது. மழையிலும் இளைஞர்கள் உற்சாகம் குறையாமல், போதைக்கு எதிரான வாசகங்கள் அச்சிடப்பட்ட டி-ஷர்ட் அணிந்து ஓடினர். போதைப் பொருளை ஒருபோதும் பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழியும் ஏற்றனர்.

மாரத்தானில் வெற்றி பெற்ற முதல் மூன்று இளைஞர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் கேடயமும் வழங்கப்பட்டதுடன் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிறைவில் மாவட்ட செயலாளர் A. நசீர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், இளைஞர்களிடையே அதிகரிக்கும் போதை பழக்கத்தை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பள்ளி, கல்லூரி, வழிபாட்டுத் தலங்கள் அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் எனவும், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.




