தமிழ்நாடு பதிவுத்துறையை டெண்டர் மூலம் தனியாருக்குக் கொடுக்கும் தமிழக அரசின் முடிவுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து, மதுரை பதிவு மாவட்டத்தின் சார்பாக மதுரை யூனியன் கிளப்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மதுரை மாவட்டப் பதிவுத்துறை ஊழியர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் திரு. ராஜமாணிக்கம் அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் திரு. வாசுதேவன் மற்றும் பொருளாளர் திரு. பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்துச் சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியை சங்கத்தின் முன்னாள் செயலாளர் திரு. கைலாஷ் சங்கர் அவர்கள் சிறப்பாகத் தொகுத்து வழங்கினார்.
இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்ட சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் திரு. கண்ணன் மற்றும் சங்கச் சட்ட ஆலோசகர் திரு. முருகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் தலைவர்கள் பேசியதாவது:
“அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித் தரும் மிக முக்கியத் துறையான பதிவுத்துறையைத் தனியாருக்குத் தாரை வார்ப்பது என்பது பொதுமக்களின் நிலப் பாதுகாப்பிற்கும், பணியாளர்களின் வேலைவாய்ப்பிற்கும் பெரும் அச்சுறுத்தலாகும். எனவே, டெண்டர் மூலம் தனியாருக்குக் கொடுக்கும் திட்டத்தை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். இல்லையெனில், மாநிலச் சங்கம் அறிவிக்கும் அனைத்துக் கட்டப் போராட்டங்களையும் மதுரை பதிவு மாவட்டம் முன்னின்று நடத்தும்.”
இக்கூட்டத்தில் மதுரை பதிவு மாவட்டத்தைச் சேர்ந்த திரளான நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பதிவுத்துறை ஊழியர்கள் பெருமளவில் கலந்து கொண்டு தங்கள் பலத்த எதிர்ப்பைப் பதிவிட்டனர்.