• Sun. Oct 25th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

நொய்யல் ஆற்றில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்..,

BySeenu

Oct 25, 2026

கோவையில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையின் தாக்கத்தால், நொய்யல் ஆற்றில் புத்துயிர் பெற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

கோவையின் முக்கிய நீராதாரமான சித்திரைச்சாவடி அணைக்கட்டில் தற்போது சுமார் இரண்டு அடி உயரத்திற்கு மேல் தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்வதால், அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பும் மகிழ்ச்சியும் ஏற்பட்டு உள்ளது.

கோவை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கன மழையின் காரணமாக, கோவையின் உயிர் நாடியான நொய்யல் ஆற்றில் நீர்வரத்து கணிசமாக உயர்ந்து உள்ளது. ஆற்றின் பல பகுதிகளில் நீண்ட நாட்களுக்குப் பிறகு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், நிலத்தடி நீர்மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரலாற்றுச் சிறப்புமிக்க சித்திரைச்சாவடி அணைக்கட்டுப் பகுதியில் இன்று (அக்டோபர் 24) நிலவரப்படி, அணைக்கட்டைக் கடந்து சுமார் இரண்டு அடி உயரத்திற்கும் மேல் தண்ணீர் ஆர்ப்பரித்துப் பாய்ந்து செல்கிறது.

இந்தத் தண்ணீர் ஆற்றின் வழியே மாவட்டத்தின் பல்வேறு குளங்களுக்கும் சென்று சேரும் என்பதால், கோவையின் வறண்ட நீர்நிலைகள் மீண்டும் நிரம்பும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

நொய்யல் ஆற்றில் ஏற்பட்டு உள்ள இந்த திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நீர்வரத்து குறித்துக் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு மகிழ்ச்சியுடன் தகவல்களைப் பகிர்ந்து உள்ளது.

“நொய்யல் ஆறு செழிக்கட்டும்! கோவையின் நீர்வளம் பெருகட்டும்!” என அவர்கள் வெளியிட்டு உள்ள இந்தச் செய்தி, சமூக வலைதளங்களில் கோவை மக்கள் இடையே வைரலாகி வருவதுடன், அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.