

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெப்ப திருவிழா கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தினமும் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் அன்னவாகனம், வெள்ளி பூத வாகனம், சேஷ வாகனம், தங்க மயில் வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

விழாவின் 9 ஆம் நாள் நிகழ்ச்சியாக நேற்று தெப்பம் முட்டு தள்ளுதலும், அதனைத் தொடர்ந்து தெப்ப தேரோட்டமும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப திருவிழா ஜிஎஸ்டி சாலையில் உள்ள தெப்பத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்ப தேரில் சுப்ரமணியசுவாமி, தெய்வானையுடன் எழுந்தருளி தெப்பத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். முன்னதாக உற்சவர் சன்னதியில் சுப்ரமணிய சுவாமி தெய்வானைக்கு பால், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சிம்மாசனத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் ஜிஎஸ்டி சாலையில் உள்ள தெப்பத்தில் எழுந்தருளினார்.

அங்கு சுவாமிக்கு சிறப்பு தீப ஆராதனைகள் நடைபெற்று தெப்பத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேரில் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளினார். மின்ஒளியில் பக்தர்கள் மிதவைத் தேரை வடம் பிடித்து இழுக்க தெப்பத்தேர் தெப்பத்தை மூன்று முறை சுற்றி வந்தது.


