• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

திருப்பதியில் நவ.1 முதல் ‘டைம் ஸ்லாட்’ டோக்கன்..!

ByA.Tamilselvan

Oct 29, 2022

பக்தர்களின் வசதிக்காக, நவம்பர் மாதம் 1-ம் தேதி முதல் தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட (டைம் ஸ்லாட்) தரிசன டோக்கன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக திருமலை – திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலையில் உள்ள அன்னமய பவனில், திருமலை – திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- “திருமலை – திருப்பதி தேவஸ்தானம் இந்த ஆண்டு (2022) ஏப்ரல் மாதம் 12-ம் தேதி திருப்பதியில் இலவச தரிசனத்தில் செல்லும் சாதாரண பக்தர்களுக்கு தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட (டைம் ஸ்லாட்) தரிசன டோக்கன் வழங்கும் முறையை நிறுத்தியது.
எனினும், பக்தர்களின் வசதிக்காக கடந்த அறங்காவலர் குழு கூட்டத்தின்போது, பக்தர்களுக்கு மீண்டும் தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட டோக்கன்கள் வழங்க முடிவு செய்தது. அதன்படி, வரும் நவம்பர் மாதம் 1-ம் தேதியில் இருந்து மீண்டும் டைம் ஸ்லாட் டோக்கன்கள் தினமும் பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளது. அந்த டோக்கன்கள் திருப்பதியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், சீனிவாசம் மற்றும் ரயில் நிலையம் அருகில் உள்ள கோவிந்தராஜசாமி சத்திரம்-2 ஆகிய இடங்களில் வழங்கப்பட உள்ளது. அதற்காக அனைத்து வசதிகளுடன் கூடிய கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாரத்தில் சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் டோக்கன்கள் வழங்கப்படும். செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 15 ஆயிரம் டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படும். இந்த நாட்களில் பக்தர்களின் வருகையை பொறுத்து டைம் ஸ்லாட் டோக்கன் விநியோகிக்கும் எண்ணிக்கையை அதிகரித்தும், குறைத்தும் வழங்கப்படும். டைம் ஸ்லாட் டோக்கன்களின் ஒதுக்கீடு அன்றைய தினம் தீர்ந்து விட்டால், பக்தர்கள் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வளாகம் 2-க்கு சென்று சாமி தரிசனத்துக்காக தங்கள் முறை வரும் வரை காத்திருக்கலாம். மேலும், சாதாரண பக்தர்கள் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் காத்திருப்பு நேரத்தைக் குறைக்கும் வகையில், சோதனை அடிப்படையில் வி.ஐ.பி. தரிசன நேரத்தை வரும் டிசம்பர் மாதம் 1-ம் தேதி முதல் காலை 8 மணியாக மாற்ற அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளது” என்று தெரிவித்தார்.