• Sat. Jan 24th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

சென்னையில் கொட்டி தீர்த்த கனமழையால் மூவர் பலி

சென்னையில் நேற்று திடீரென கன மழை பெய்தநிலையில், மின்சாரம் தாக்கியதில் சிறுவன் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.

மயிலாப்பூரில் சாலையில் தேங்கியிருந்த நீரில் மின்சாரம் கசிந்ததால் 13 வயது சிறுவன் இலட்சுமணன் உயிரிழந்தார்.

புளியந்தோப்பு பகுதியில், இரண்டாவது மாடியில் குடியிருந்த பெண் மீனா, கடைக்குச் செல்வதற்காக மழைநீரில் நடந்துசென்ற போது மின்சாரம் தாக்கியதில் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

ஓட்டேரி பகுதியில் சாலையில் நடந்துசென்ற மூதாட்டி ஒருவர் மின்சாரம் தாக்கி இறந்துபோனார்.
வானிலை முன்னறிவிப்பில் கணிக்கப்படாதபடி சென்னையில் நேற்று இந்தத் திடீர் மழை பெய்யத் தொடங்கியது. முற்பகல் முதல் வானிலை சட்டென மாறத் தொடங்கி மேகமூட்டம் போட்டு வானம் இருண்டது.மதியம் தொடங்கிய மழை, படிப்படியாக வலுத்து இரவு 7 மணி வரை நீடித்தது. இதனால் நகர் முழுவதும் வெள்ளம்பெருக்கெடுத்தது.மாலையில் வேலையிடங்களிலிருந்து வீடுதிரும்பும் நேரத்தில் மழை பெய்துகொண்டே இருந்தது


சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில், பெரும்பாலான இடங்களில் பேருந்துகளே வரவில்லை. மேலும், வெள்ளநீர் சாலையை அடைத்தபடி நின்றதால், வாகனங்களும் பேருந்துகளும் ஊர்ந்துசெல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.


எழும்பூர் கெங்கு சுரங்கப்பாதை, தியாகராயர் நகர் மேட்லி சுரங்கப்பாதை, அரங்கநாதன் சுரங்கப்பாதை, துறைமுகம் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஆகியன நீர் தேங்கியதால் மூடப்பட்டன. இதனால் அந்த வழித்தடங்களில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.வங்கக் கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது, நிலப்பகுதியை நோக்கி நகர்ந்ததே, நேற்றைய சென்னை திடீர் மழைக்கு காரணம் என்று வானிலை மையம் தெரிவித்தது.நேற்று முற்பகல் 11.45 மணிக்கு வெளியிடப்பட்ட அன்றாட முன்னறிவிப்பில், கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் கூறியிருந்தது. ஆனால், சென்னையில் இலேசான, மிதமான மழை பெய்யும் எனக் கூறப்பட்டிருந்தது.ஆனால், திடீர் மழை பெய்து சில மணி நேரங்களில் ஒட்டுமொத்த நகரையே பெரும் அவதிக்கு உள்ளாக்கிவிட்டது.அண்ணாசாலை, பூந்தமல்லி சாலை, நூறடி சாலை, ஜிஎஸ்டி சாலை, ஜிஎண்டி சாலை ஆகியவற்றில் கடுமையான நெரிசல் ஏற்பட்டது.


அவரச ஊர்திகளும் இந்த நெரிசலில் சிக்கிக்கொண்டதை பல இடங்களில் பார்க்கமுடிந்தது.
நேற்று இரவு 7.45 மணி நிலவரப்படி,சென்னையில் அதிகபட்சமாக எம்.ஆர்.சி. நகர் வட்டாரத்தில் 19.8 செ.மீ, நுங்கம்பாக்கத்தில் 15.9 செமீ, நந்தனம் பகுதியில் 15.2 செமீ, அண்ணா பல்கலைக்கழகம் பகுதியில் 12.1 செ.மீ., காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு உட்பட்ட ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரியில் 10.85 செமீ, மீனம்பாக்கத்தில் 10.8 செ.மீ. என மழைப்பொழிவு பதிவாகியிருந்தது.