ராஜபாளையம் நகராட்சியில் 52,797 சொத்து வரி இனங்கள் மூலம் ரூ.19.81 கோடி, தொழில் வரி ரூ.1.82 கோடி, பாதாள சாக்கடை வரி ரூ.3 கோடி, குடிநீர் வரி, காலிமனை வரி என மொத்தம் ரூ.31.83 கோடி வரி வருவாய் கிடைக்கிறது.
100 சதவீதம் வரி வசூல் செய்தால் மட்டுமே மத்திய நிதிக்குழு மானியம் கிடைக்கும் என்பதால் அதிகாரிகள் தீவிர வரி வசூலில் ஈடுபட்டு வந்தனர். 100 சதவீதம் வரி வசூல் செய்யப்பட்டதாக நகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நகராட்சி சார்பில் தற்காலிக பணியாளர்களை கொண்டு வீடு வீடாக சென்று, வரி செலுத்திய ரசீதை கொடுத்து பணம் செலுத்த வேண்டும் எனக்கோரி வசூல் செய்து வருவதால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். உடனடியாக பணம் வழங்காத வீடுகளின் முன் குப்பை தொட்டி வைத்தும், வணிக கடைகளுக்கு சீல் வைத்தும் வருகின்றனர்.

கடந்த வாரம் நடந்த நகராட்சி கூட்டத்தில் பேசிய கவுன்சிலர்கள், நகராட்சி பணியாளர்கள் எனக்கூறி ரசீதுடன் வரி வசூல் செய்ய வருபவர்கள் அடையாள அட்டை இல்லாமல் பணத்தை உடனே வழங்மாறு வற்புறுத்துவதாக தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த வருவாய் அலுவலர் முத்துசெல்வம்: வரி வசூலில் ஈடுபட்டுள்ளவர்கள் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. வரி வசூல் செய்வது குறித்து ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் 100 சதவீதம் வரி வசூல் செய்தால் மட்டுமே நிதிக்குழு மானியம் கிடைக்கும் என்பதாலும், இலக்கை முடிக்க வேண்டும் என்பதாலும் அதிகாரிகள் சொந்த பணத்தை போட்டு, வரிகளை முழுமையாக கட்டி உள்ளோம். அந்த பணத்தை வசூல் செய்வதற்கு கவுன்சிலர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும், என்றார்.
இந்நிலையில் ராஜபாளையம் நகராட்சியில் உள்ள வாகன காப்பகங்களுக்கு 2024 – 2025 நிதியண்டுக்கான சொத்து வரி செலுத்திய நிலையில், உயர்த்திய வரியை செலுத்துமாறு ரசீதை கொடுத்து உடனே பணத்தை வழங்குமாறு வற்புறுத்துகின்றனர். நேற்று ராஜபாளையம் சங்கரன்கோவில் சாலையில் உள்ள வாகன காப்பகத்திற்கு வந்த வருவாய் அலுவலர் முத்துசெல்வம் தலைமையில் வருவாய் ஆய்வாளர் மீனாட்சிசுந்தரம் உட்பட 7 பணியாளர்கள், வரி கட்டிய ரசீதை கொடுத்து உடனே பணம் வழங்க வேண்டும். இல்லையென்றால் சீல் வைத்து விடுவோம் எனக்கூறினர். வழக்கறிஞர் மற்றும் ஊர் தலைவர்கள் வந்து பேசிய போது, வருவாய் அலுவலர் அதிகாரிகளின் உத்தரவுபடியே நகராட்சி தலைவர் மற்றும் ஆணையர் என அனைவரும் பேசியே வரி உயர்த்தப்பட்டு உள்ளது.
அதனால் வரி செலுத்தும் வரை இங்கே தான் இருப்போம் எனக்கூறி மதிய உணவு வாங்கி வரச்சொல்லி அங்கேயே உணவு அருந்தி விட்டு காத்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தொழில்துறையினர் மற்றும் பொதுமக்கள் கூறுகையில்: ராஜபாளையம் நகராட்சியில் திட்ட பணிகள் தாமதம் மற்றும் சொத்து வரி உயர்வுக்கு எதிராக வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து கடையடைப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்திய பின்னரே நகராட்சி நிர்வாகம் பிரச்சினையை சரி செய்தது. சாலையை சீரமைக்கக்கோரி கடையடைப்பு போராட்டம் அறிவித்த பின்னரே சாலை அமைக்கப்பட்டது.
அதேபோல் முன் அறிவிப்பு இன்றி வரியை உயர்த்தி அதை அவர்களே கட்டி விட்டு, அடாவடி வசூல் செய்வது, கேள்வி கேட்பவர்கள் கடைகளுக்கு சீல் வைத்தும், வீடுகளின் முன் குப்பை தொட்டி வைத்தும் அதிகாரிகள் மிரட்டல் விடுப்பது கண்டிக்கத்தக்கது. இதில் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காவிட்டால், முகு அடைப்பு போராட்டம் நடத்தப்படும், என்றனர்.