• Fri. May 3rd, 2024

சிவகாசியில், ‘திருவாதிரை’ திருவிழா கொண்டாட்டம்..,’பூத்தேரில்’ எழுந்தருளிய சுவாமிகள்..!

ByKalamegam Viswanathan

Dec 27, 2023

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் திருவாதிரை திருவிழா கொண்டாட்டத்தில், பூத்தேரில் சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்தனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இன்று திருவாதிரை திருவிழா வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில், மார்கழி மாத திருவாதிரை நாளை ‘ஆருத்ரா’ தரிசனமாக பக்தர்கள் கொண்டாடுவார்கள். இன்று திருவாதிரையை முன்னிட்டு சிவகாசியில் இந்து நாடார்கள் பலசரக்கு வர்த்தக மகமைப்பண்டுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீசுப்பிரமணியர் சுவாமி கோவிலில் ஸ்ரீநடராஜர் – ஸ்ரீசிவகாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து ஸ்ரீநடராஜர் – ஸ்ரீசிவகாமி அம்பாள் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பூத்தேரில் எழுந்தருளினர்.
மேலும் இந்து நாடார்கள் உறவின்முறைக்கு சொந்தமான ஸ்ரீபத்திரகாளியம்மன் – ஸ்ரீமாரியம்மன் கோவில்களில் இருந்து சுவாமிகள் கடைக்கோவிலில் எழுந்தருளினர். அதனை தொடர்ந்து ஸ்ரீபத்திரகாளியம்மன் – ஸ்ரீமாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் அலங்கரிக்கப்பட்ட பூத்தேரில் ஸ்ரீபத்திரகாளியம்மன் – ஸ்ரீமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். மேலும் காமாட்சியம்மன் கோவிலில் இருந்து ஸ்ரீகாமாட்சி அம்மன் பூத்தேரில் எழுந்தருளினர். அலங்கரிக்கப்பட்ட பூத்தேரில் எழுந்தருளிய சுவாமிகள், நான்கு ரதவீதிகளில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. பூத்தேரில் எழுந்தருளி ரதவீதிகளில் வலம் வரும் சுவாமிகளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *