தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு நாளொன்றுக்கு உள்ளூர், வெளியூர், வெளி மாவட்டங்கள், வெளிநாடுகள் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கோடை காலம் ஆரம்பித்ததிலிருந்து சாமி தரிசனம் செய்துவிட்டு கோவிலின் சன்னதி பாதையில் நடந்து வருவதற்கு கடும் வெயில் தாக்கத்தால் மிகவும் சிரமப்பட்டனர்.

இந்த நிலையில் தன்னார்வலர் ஒருவரால் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது வரவேற்பை பெற்றுள்ளது. கோடை காலத்தில் பங்குனி , சித்திரை மாதம் என்றாலே வெயில் தாக்கம் அதிகரிக்கும். சித்திரை மாதம் பிறந்து 4 நாட்களாகி விட்டது. இந்த நிலையில் காலை 11 மணிக்கு எல்லாம் வெயில் உச்சத்தை தொடுகிறது.
தற்போதே மூதாட்டிகள் மற்றும் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலையாக உள்ளது. தற்போது மதுரையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மே மாதம் 4-ந் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது. மே மாதம் 28-ந் தேதி அக்னி நட்சத்திரம் நிவர்த்தியாகிறது. கிட்டதட்ட 24 நாட்கள் கத்திரி வெயிலின் வெப்பத்தால் கடும் தாக்கததை ஏற்படுத்தும் .
இந்த நிலையில் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு வந்து செல்லக்கூடிய பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தங்களது காலனிகளை (செருப்புகள்)உரிய இடத்தில் விட்டு நடந்து கோவிலுக்குள் செல்லும்போதும், கோவிலில் தரிசனம் செய்து விட்டு காலனி விட்ட இடத்திற்கு நடந்து வரும் போதும் வெயிலின் கொடுமையால் நடப்பதற்கு மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.
இந்த நிலையில் மதுரை புறநகர் தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் ஆலோசனைப்படி மதுரை புறநகர் தி.மு.க இளைஞரணி மாவட்ட அமைப்பாளர்
விமல் தனது சொந்த செலவில் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் வாசல் முன்பு தகரத்திலான பந்தல் அமைப்பதற்கு முன்வந்துள்ளார்.
அதன்படி அவர் கோவில் வாசல் முன்பு சுமார் ரூ 1 லட்சத்தில் தகரத்திலான பந்தல் (தற்காலிக மேற்கூரை) அமைத்தனர். வெயில் காலம் முடியும் வரை பக்தர்கள் வசதிக்காக இந்த தகரத்திலான மேற்கூரை பயன்பாட்டில் இருக்கும். இதை பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் மட்டுமல்லாது உள்ளூர் பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.. வெயில் காலம் ஆரம்பித்ததில் இருந்து கோயிலுக்கு வரும் பக்தர்கள் பந்தல் அமைப்பது மட்டும் நடந்து செல்வதற்கு ஏதுவாக கம்பளம் விரிப்பதற்கு கோவில் நிர்வாகத்திடம் முறையிட்டு வந்த நிலையில் கோவில் நிர்வாகம் சார்பில் சில இடங்களில் கம்பளம் மட்டும் விரிக்கப்பட்டது.
இந்த நிலையில் பந்தல் அமைக்கப்படவில்லை தற்போது திமுக இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் விமல் சார்பில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது . பொது மக்களுடைய பாராட்டை பெற்றுள்ளது.