• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

நாகரீகத்தின் எல்லையை மீறுகிறது சீமானின் பேச்சு…. திருமாவளவன் கண்டனம்

ByP.Kavitha Kumar

Jan 10, 2025

சீமானின் பேச்சு நாகரீகத்தின் எல்லையை மீறியதாக இருக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.

இது தொடர்பாக அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில்,” நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சு நாகரீகத்தின் எல்லையை மீறியதாக இருக்கிறது. குதர்க்கவாதமாகவும் இருக்கிறது. அவர் பேசும் அரசியலுக்கே அதை எதிராக போய் முடியும். தேசிய அளவிலாக பாஜக உள்ளிட்ட சங்பரிவார் பேசுகின்ற மதவழி தேசியம் தான் மொழி வழி தேசியத்தின் முதன்மையான எதிரியாக இருக்க முடியும். தமிழ் தேசியத்தின் உண்மையான எதிரியாக இருக்க முடியும்.

அதை விடுத்து தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும், தமிழ்நாட்டிற்காகவும் தனது இறுதி மூச்சு வரை தீவிரமாக களப்பணியாற்றிய தமிழ்நாட்டு மக்களின் பெருமதிப்பிற்குரிய சமூக நீதியின் தேசிய அடையாளமாக இருக்கக்கூடிய தந்தை பெரியாரை கொச்சைப்படுத்துவது ஏற்புடையது அல்ல. இந்த போக்கை சீமான் கைவிட வேண்டும்.

காட்டுமிராண்டி காலத்தில் இருந்து தமிழ் பேசப்படுகிறது என்று தொன்மையை பேசுவதற்காக பெரியார் அவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். அதுதான் சரியான பார்வை. தமிழ் காலத்திற்கேற்ப, நவீன அறிவியல் வளர்ச்சிக்கேற்ப, தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப புதிய புதிய சொற்களை உள்வாங்கிக் கொண்டு வளர்ச்சி பெற வேண்டும் வலுப்பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அவர் சொன்னதை தவறாக திரித்துப் பேசுகிறார்கள். தந்தை பெரியாரின் தியாகத்தை கொச்சைப்படுத்துகிறார்கள். இது ஏற்புடையதல்ல”என்று கூறினார்..