• Sat. Jan 24th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

குடியிருப்புகளுக்கும் தீ பரவி வருவதால் பரபரப்பு !!!

BySeenu

Jan 23, 2026

கோவை, காட்டூர், பட்டேல் ரோடு, பிள்ளையார் கோவில் தெருவில் அமைந்து உள்ள மாதேஸ்வரி இயந்திர உதிரிபாகங்கள் (Spare Parts) விற்பனை கடையில், ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், கடைக்குள் இருந்த ஆயில் மற்றும் பிளாஸ்டிக் உதிரிபாகங்கள் தீப்பிடித்ததால், சில நிமிடங்களிலேயே தீ மள மளவென எரிய துவங்கியது.

உதிரிபாகக் கடைக்கு மிக அருகிலேயே நெருக்கமான குடியிருப்புகள் அமைந்து உள்ளதால், தீயானது அடுத்தடுத்த வீடுகளுக்கும் வேகமாகப் பற்றிப் பரவத் துவங்கியதால் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.

​தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குத் தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன. இருப்பினும், குறுகலான வீதிகள் மற்றும் கொழுந்து விட்டு எரியும் தீயினால், தீயணைப்பு வீரர்கள் உள்ளே நுழைவதில் பெரும் சவால்கள் ஏற்பட்டன.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அப்பகுதி பொதுமக்களும் போலீசாருடன் கைகோர்த்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

உதிரிபாகக் கடையில் ஏற்பட்ட இந்த விபத்திற்கு மின் கசிவு காரணமா ? அல்லது வேறு ஏதேனும் கவனக்குறைவா ? என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரக் கூடுதல் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு உள்ளன.

தொடர்ந்து தீயணைப்புப் படையினர் கடும் போராட்டத்திற்கு மத்தியில் தீயை அணைக்க முற்பட்டு வருவதால், காட்டூர் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பும், பதற்றமும் நீடிக்கிறது.