• Fri. Apr 26th, 2024

தேனி: முல்லைப் பெரியாறு அணை விவகாரம்; மார்ச் 15ல், மதுரையில் உண்ணாவிரதம்

முல்லைப் பெரியாறு அணை நிர்வாக அதிகாரம் கேரளாவில் உள்ளதா? தமிழகத்தில் உள்ளதா? என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டுமென வலியுறுத்தி, மார்ச் 15ல், மதுரையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளதாக, தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாநில தலைவர்
பி.ஆர்., பாண்டியன் தெரிவித்தார்.

முல்லைப் பெரியாறு வைகை பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு (6 மாவட்டங்கள்) சார்பில், தேனியில் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சமீபத்தில் நடந்தது. இக்கூட்டத்திற்கு, முல்லைப் பெரியாறு வைகை பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வழக்கறிஞர் எம்.கே.எம்., முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். துணைத் தலைவர்
எம்.பி., ராமன், மதுரை மாவட்ட தலைவர் மணிகண்டன் (உசிலம்பட்டி), செயலாளர் அருண் (மேலூர்), தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில தலைவர் பழனியப்பன், நாகை மாவட்ட செயலாளர் எஸ். ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பி.ஆர்., பாண்டியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

மத்திய அரசு முல்லைப் பெரியாறு பிரச்னையில் தமிழக நலனுக்கு எதிராக சதி செய்கிறது. உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு செய்ய மனு செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி மத்திய அரசால் அமைக்கப்பட்ட ஆய்வு குழு உச்ச நீதிமன்றத்தில் கடந்த டிசம்பர் மாதம் வரையிலும், அணை வலுவாக உள்ளது என்று உறுதியோடு எடுத்துச் சென்ற நிலையில் ஆதாரத்தோடு எடுத்துரைத்தது. தற்போது, அதனை மாற்றிக் கொண்டு மறு ஆய்வு செய்ய வேண்டும் என மனு செய்திருப்பது மிகுந்த சந்தேகம் அளிக்கிறது.

கேரள முதலமைச்சர் ஏற்கனவே கேரள சட்டமன்றத்தில் அணை வலுவாக உள்ளது என்பதை உறுதியோடு தெரிவித்து, அணை
வழு விழுந்துள்ளதாக தகவல் பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டமன்றத்திலேயே அறிவித்துள்ளார்.

இந்நிலையில் மத்திய அரசின் நிலைப்பாடு மிகுந்த கண்டனத்துக்குரியது.

கேரள அரசு முல்லைப் பெரியாறு அணைக்கு புதிய நிர்வாக பொறியாளர் நியமனம் செய்து தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக, சந்தேகம் எழுகிறது. சில தினங்களுக்கு முன்னதாக கேரள நீர்ப்பாசனத் துறை பொறியாளர்கள், தமிழக பொறியாளர்கள் அனுமதி இல்லாமலேயே அணைப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து ஆய்வு செய்திருக்கிறார்கள். இதனால் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்ட விவசாயிகள் மிகுந்த அச்சத்திற்கும், கொந்தளிப்புக்கும் தள்ளப்பட்டுள்ளார்கள். எனவே தமிழக அரசு முல்லைப் பெரியாறு அணை கேரளா அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா? தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா? என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெளிவுபடுத்த முன்வர வேண்டும்.

இதனை வலியுறுத்தி, மார்ச் 15ம் தேதி மதுரையில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்கும் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். முல்லைப் பெரியாறு வைகை பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் என்.செந்தில்குமார், நிர்வாகி ராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *