விருதுநகர் மாவட்டம் இராமலிங்க புரத்தை சேர்ந்தவர் சிதம்பரம். இவர் கடந்த 8 ஆண்டுகளாக கல்பாக்கத்தில் ஹோட்டல் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கல்பாக்கத்தில் இருந்து இன்று இராமலிங்கபுரம் வந்த சிதம்பரம் காலையில் சாத்தூரில் உள்ள எஸ்.பி.ஐ வங்கியில் தன்னுடைய வங்கி கணக்கிலிருந்து 6 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் எடுத்து உள்ளார்.

மேலும் பணத்தை எடுத்து கொண்டு வங்கியில் இருந்து வெளியே வந்த சிதம்பரம் பணத்தை தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வைத்து விட்டு வங்கி வாசலில் இருந்த பழக்கடையில் கொய்யாப்பழம் வாங்கி உள்ளார்.

மேலும் கொய்யாப்பழம் வாங்கி விட்டு தன்னுடைய இரு சக்கர வாகனத்தை சிதம்பரம் எடுக்க வந்த போது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த 6 லட்சம் பணம் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் உடனடியாக சிதம்பரம் பணம் திருடு போனது குறித்து சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அடுத்து காவல் துறையினர் வங்கியில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் சாலையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து ஆறு லட்சம் பணத்தை திருடிய நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.