• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

எழும்பூர் ரயில் நிலையத்தின் அடித்தளம் அமைக்கும் பணிகள் தீவிரம்..!

Byவிஷா

Jan 18, 2024

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் மறுசீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறுவதையொட்டி, அதன் அடித்தளம் அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
சென்னை எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி, ரயில் நிலைய பார்சல் அலுவலகமும் டிக்கெட் முன்பதிவு மையமும் இட மாற்றம் செய்யப்பட உள்ளன. தமிழகத்தின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாக எழும்பூர் ரயில் நிலையம் விளங்குகிறது. நூற்றாண்டு கடந்த இந்தநிலையத்தை, பல்வேறு நவீனவசதிகளுடன் உலகத் தரத்துக்கு மேம்படுத்த தெற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.
அதன்படி, அடுத்த 50 ஆண்டுகளில் ரயில்கள் இயக்கம், பயணிகள் வருகை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு, மறுசீரமைப்பு பணிகளை ரூ.734.91 கோடியில் மேற்கொள்ள ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்துக்கு கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபரில் ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இதையடுத்து, எழும்பூர் நிலைய மறுசீரமைப்பு பணியை அந்த நிறுவனம் கடந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கியது.
இதன் முதல்கட்டமாக, எழும்பூர் ரயில் நிலையம் அருகே ஊழியர்கள், அதிகாரிகள் குடியிருப்புகள் ஆகியவற்றை இடித்தும், மரங்களை அகற்றும் பணியும் முடிந்த பிறகு, அடித்தளம் அமைக்கும் பணி தொடங்கியது. இந்தப் பணி தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ரயில் நிலைய கட்டிடங்கள், பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம், காந்தி-இர்வின் சாலை மற்றும் பூந்தமல்லி சாலை அருகே வணிக வளாகங்கள் அமைத்தல், புதிய பார்சல் அலுவலகம், 72 மீட்டர் புறப்பாடு மையம், 36 மீட்டர் பாதை வழியாக பயணிகள் அமருமிடம், நடைமேம்பாலம், பார்சல்களை கையாளுவதற்கான நடைமேம்பாலம், புதிய மின் துணை நிலையம், புதிய ரயில்வே குடியிருப்புகள் கட்டுதல், மறுவடிவமைப்பு உள்ளிட்ட துணைதிட்டப்பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. இவற்றில் சில பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.
இவற்றுக்கு முன்னோட்டமாக, காந்தி இர்வின் சாலையை ஒட்டி, முன்பு ரயில்வே குடியிருப்பு அமைந்திருந்த பகுதியில், எழும்பூர் ரயில்நிலைய கட்டிடத்துக்கான அடித்தளம் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது..,
எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள் தற்போது தீவிரமடைந்துள்ளன. எழும்பூர் ரயில் நிலையத்தின் காந்தி-இர்வின் மற்றும் பூந்தமல்லி சாலை பக்கத்தில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம், வணிக இடம் கட்டும் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. பூமிக்கு அடியில் பல அடி ஆழத்தில் கம்பிகளை பதித்து, அடித்தளம் போடப்பட்டுள்ளது.
எழும்பூரில் ரயில் நிலையம் உலகத் தரத்தில் அமைய வேண்டும் என்பதற்காக, தமிழக அரசின் பல்வேறு துறைகளும் இந்த பணிக்கு முழு ஆதரவை அளித்து வருகின்றன.