• Tue. Feb 18th, 2025

வீடுகளில் கருப்பு கொடி கட்டி தேர்தலை புறக்கணித்த கிராமம்

ByJeisriRam

Apr 13, 2024

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள கோடாங்கிபட்டி கிராமத்தில் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக வீடுகளில் கருப்பு கொடி கட்டியும், சுவரொட்டிகள் ஒட்டியும் கிராம மக்கள் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் கையில் கருப்பு கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

போடி தாலுக்காவிற்குட்பட்ட கோடாங்கிபட்டி கிராமத்தில் சுமார் 250 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் கடந்த 1994 ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறையால் ஏழ்மைநிலையில் உள்ள தாழ்த்தப்பட்ட 97 கிராம மக்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவை தனிநபர் போலி ஆவணம் செய்து, ஆக்கிரமிப்பு செய்ததாக கிராம மக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து தாசில்தார் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்காததால் வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் புறக்கணிக்கப் போவதாக கூறி, கிராம மக்கள் வீடுகள் தோறும் கருப்புக்கொடி கட்டியும், கையில் கருப்புக்கொடி ஏந்தியவாறு போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் கிராமப் பகுதிகளில் தேர்தலை புறக்கணிக்கிறோம் என்று சுவரொட்டிகளை ஒட்டி உள்ளனர். எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றாத வரை தேர்தலை புறக்கணிக்க போவதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.