
உலக புகழ் பெற்ற நாகூர் தர்கா நாகை மாவட்டத்தில் உள்ளது. 470 வருட பாரம்பரிய பழக்கவழக்கம் கொண்ட நாகூர் தர்காவினை ஸ்கிம் படி பரம்பரை அறங்காவலர்கள் நிர்வாகித்து வருகின்றனர்.
கடந்த 19-5-2025 அன்று பரம்பரை டிரஸ்டி அல்ஹாஜ் டாக்டர் செய்யது காமில் சாஹிப் இயற்கை எய்தினார். அன்னாரின் மறைவையொட்டி தர்கா பழக்க வழக்கங்கள் படி 3ம் நாள் அடுத்த வாரிசு பொறுப்பேற்க வேண்டும். அதன் படி அன்னாரின் மூத்த மகன் ஹாஜி செய்யது முஹம்மது கலிபா சாஹிப் காதிரி ஹாசிமி இன்று நாகூர் தர்கா அலுவலகத்தில் நாகூர் தர்கா பரம்பரை டிரஸ்டி ஆக பொறுப்பேற்று கொண்டார். இவர் நாகூர் ஆண்டவரின் 11ம் தலைமுறை ஆதீனமாவர்.

பாரம்பரிய முறைப்படி அன்னாருக்கு நாகூர் ஆண்டவரின் தலைப்பாகை அணிவிக்கப்பட்டு குண்டுகள் முழங்க, நாகூர் ஆண்டவரின் சன்னதி திறக்கப்பட்டு பாத்திஹா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் போர்ட் ஆஃப் டிரஸ்டிகள் , தர்கா ஆதீனஸ்தர்கள், ஜமாத்தார்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு ஹாஜி செய்யது முஹம்மது கலிபா சாஹிப் காதிரி ஹாசிமிகு வாழ்த்து தெரிவித்தனர்.
ஹாஜி செய்யது முஹம்மது கலிபா சாஹிப் காதிரி ஹாசிமி அவர்கள் 1977ம் ஆண்டு நாகூரில் பிறந்தவராவர். பன்னாட்டு நிறுவனங்களில் தலைமை நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்துள்ளார். கடந்த 2013ம் ஆண்டு முதல் நாகூர் தர்கா தர்கா நிதி குழு தலைவராக பணிபுரிந்த அனுபவம் பெற்றவர். தற்போது தமிழக வக்ப் வாரிய முத்தவல்லியாகவும், தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் அசோசியேசன் தலைவராகவும் இருக்கிறார். தமிழக அரசின் தமிழ் செம்மல் விருது பெற்ற முதல் இஸ்லாமியர் ஆவர், தமிழக அரசின் ஹஜ் கமிட்டி உறுப்பினர், உள்ளிட்ட ஏராளமான பொறுப்பு வகித்தவர் ஆவர்.
