• Fri. Oct 30th, 2026

ஷூவுக்குள் இருந்த சாவியைக் கண்டுபிடித்துச் சொந்த வீடு போல் நுழைந்த திருடன் !

BySeenu

Oct 30, 2026

கோவை, ஒத்தகால்மண்டபம் பகுதியில், வீட்டிற்குள் கண்காணிப்பு கேமரா (CCTV) இருப்பதைப் பார்த்தும் சற்றும் அஞ்சாமல், காலணிக்குள் மறைத்து வைக்கப்பட்டு இருந்த சாவியை எடுத்து வீட்டைத் திறந்து ₹1.25 லட்சம் மதிப்பிலான மடிக்கணினியைத் திருடிச் சென்ற மர்ம நபரின் வீடியோ காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம், ஒத்தகால்மண்டபம் அருகே உள்ள பகுதியில் தனியார் ஐடி (IT) நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர் வாடகைக்குத் தங்கி வேலைக்குச் சென்று வருகின்றனர்.

​இந்நிலையில், வழக்கம் போல் ஊழியர்கள் அனைவரும் பூட்டி விட்டு வேலைக்குச் சென்ற பிறகு, மர்ம நபர் ஒருவன் அங்கு வந்து உள்ளான். வீட்டின் வாசலில் சி.சி.டி.வி கேமரா பொருத்தப்பட்டு இருப்பதை நேருக்கு நேராகப் பார்த்த பின்னரும், சற்றும் அச்சமின்றித் தன் சொந்த வீட்டிற்குள் நுழைவது போலவே சர்வசாதாரணமாக உள்ளே நுழைந்து உள்ளான்.
​
வாசலில் வைக்கப்பட்டு இருந்த காலணிகளை (Shoes/Footwear) ஒவ்வொன்றாகத் தேடிப் பார்த்த அந்தத் திருடன், அங்கு மறைத்து வைக்கப்பட்டு இருந்த வீட்டின் சாவியைக் கண்டுபிடித்து உள்ளான். பின்னர், அந்தச் சாவியைக் கொண்டு பூட்டைத் திறந்து வீட்டிற்குள் நுழைந்து, அங்கு இருந்த ₹1.25 லட்சம் மதிப்பிலான விலை உயர்ந்த மடிக்கணினியை (Laptop) திருடிக் கொண்டு கணநேரத்தில் தப்பியோடி உள்ளான்.

சி.சி.டி.வி கேமராக்கள் மற்றும் காவல் துறையின் மீதே பயமின்றி, பூட்டிய வீடுகளின் வாசலிலேயே சாவியை வைத்து விட்டுச் செல்லும் பழக்கத்தைச் சாதகமாக்கிக் கொண்டு துணிச்சலாகத் திருட்டில் ஈடுபட்ட இந்தச் சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

​இச்சம்பவம் குறித்துச் செட்டிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, கடந்த 10 நாட்களாக போலீசார் இந்த மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

சி.சி.டி.வி காட்சிகளில் பதிவாகி உள்ள இந்த நபரைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தாலோ ? அல்லது அடையாளம் கண்டாலோ ? உடனடியாக செட்டிபாளையம் காவல் நிலையத்திற்கோ அல்லது +91 97875 18774 / +91 95003 36614 ஆகிய எண்களுக்கோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

​வீட்டு வாசலில், ஷூ மற்றும் பூந்தொட்டிகளுக்குள் சாவியை மறைத்து வைத்துவிட்டுச் செல்லும் வழக்கத்தைத் தவிர்க்க வேண்டும் என்றும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டு உள்ளனர்.