கடையம் அருகில் உள்ள முதலியார் பட்டி ரஹ்மத் நகரில் சுமார் நூறு இஸ்லாமிய குடும்பங்கள், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் வசித்து வந்த, வரதராஜூலு என்பவரும், அவருடைய மகன் குமார் என்பவரும் வீடுகளைக் கட்டி விற்பனை செய்துள்ளனர். ஊராட்சியில் அனுமதி பெற்று,
தீர்வையையும், முறையாக வரியையும் கட்டி வருகின்றனர். இப்பகுதிக்குள் அரசினுடைய சேவை மையம் மற்றும் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கான தண்ணீர் தொட்டி ஆகியவையும் உள்ளன.

ஆனால் இப்பகுதியில் ரோடு வசதி, குடிநீர் வசதி, தெரு விளக்கு வசதி, கழிவு நீர் ஓடை வசதி, உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கவில்லை.
அப்பகுதி மக்கள் பலமுறை மனுக்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்பற்ற முறையில் வாழ்ந்து வருகின்றனர். அடிக்கடி ஊருக்குள் விஷ ஜந்துக்கள் நுழைந்து விடுகின்றன. எனவே இதனை உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இப்பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட அமைப்புச் செயலாளர் கட்டி அப்துல் காதர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தாமதிக்கும் பட்சத்தில் இப்பகுதியில் உள்ள அனைவரும் தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையை மாவட்ட ஆட்சியரிடம், திரும்ப கொடுக்கும் போராட்டம் விரைவில் நடைபெறும் என்பதையும் தெரிவித்துள்ளனர்.