தமிழகத்தின் சத்துணவு திட்டம் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியான திட்டமாக திகழ்கிறது.அது மட்டுமின்றி கல்வித்தரத்தை மேம்படுத்திய ஒரு பங்கும் இந்த திட்டத்திற்கு உண்டு. இன்றும் பலர் “பள்ளிக்கூடம் போனா சாப்பாடுகிடைக்கும் அத சாப்ட்டு படிச்சு வளந்து வந்தவங்க நாங்க என்று நினைவு கூறுவது உண்டு. ஆனால் இன்றுள்ள பலருக்கும் இந்த சத்துணவு திட்டம் குறித்த தெளிவு இல்லாமல் இருக்கின்றனர். இது குறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு.

சத்துணவு திட்டத்திற்கான பிள்ளையார் சுழி நீதி கட்சி காலத்திலேயே போடப்பட்டுள்ளது. 1885 ஆம் ஆண்டு காலகட்டத்தில் பிறந்த குருசாமி அவர்கள் சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சியில் 10 ஆண்டுகள் சட்டமேலவை உறுப்பினராகவும் (1920 – 1930), 22 ஆண்டுகள் கௌரவ நீதிபதியாகவும் பதவி வகித்தார். “மக்களின் தாழ்வு மனப்பான்மை நீங்க வேண்டுமாயின் ஆதிக்குடிமக்கள் வெளியரங்குக்கு வந்து, தாங்கள் தங்கள் பிறப்பினால் பெருமை அடைவதாகச் சொல்லவேண்டும்” என வலியுறுத்தினார்.

தலித்துகளிலும் தலித்துக்கள் என்று அழைக்கப்பட்ட அருந்ததியர்கள் நலனுக்காக, 1921-ல் அருந்ததிய மகாசபா என்ற இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு, அதன் தலைவராக குருசாமியும், செயலாளராக எச்.எம். ஜெகநாதமும் செயல்பட்டனர். இவ்விருவரும், சென்னை மாகாண அவை உறுப்பினர்களாக பொறுப்பு வகித்ததால், அருந்ததிய மகாசபா பொறுப்பினை அருந்ததியர் மற்றும் இதர ஒதுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்குப் போராடும் களமாக பயன்படுத்திக் கொண்டனர். பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு வந்த அக்காலங்களிலேயே பெண்கள் கல்வி கற்கவேண்டும் எனவும், ஆண்களுக்கு நிகரான கல்வியைப் பெறுவதற்கு, இருபாலர் பள்ளி, கல்லூரிகளை திறக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். ஆரம்பம் முதலே மாணவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு செயல்பட்ட இவர்கள், பகலில் வேலைக்குச் சென்று இரவு வீடு திரும்பும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்காக இரவுப் பள்ளிகளை திறக்க எண்ணினர். அதன் முயற்சியாக, 1921ஆம் ஆண்டு, சென்னையில் புளியந்தோப்பு, சூளைமேடு, பெரியமேடு ஆகிய பகுதிகளில் இரவுப்பள்ளிகளையும், பெரம்பூரில் இரவு மற்றும் பகல் பள்ளிகளையும் தொடங்கி 1929 ஆம் ஆண்டுவரை நடத்தி வந்தனர்.
கல்வியில் நாட்டம் செலுத்த அவர்களைத் தூண்டப் போதுமானவையாய் இல்லை என்கிற அளவுக்கு எங்களது வறுமை கொடுமையானதாக உள்ளது. அரசின் செலவில் ஒரு நாளைக்குக் குறைந்தது ஒரு நேர உணவையாவது அவர்கள் பெறக்கூடிய அளவிற்கு, அவர்களது கல்விக்காகக் கூடுதல் தொகை செலவு செய்யப்பட வேண்டும்.” என 1923 – ஆம் ஆண்டே அன்றைய நீதிக்கட்சியின் சட்டமேலவை உறுப்பினராக இருந்த எல் சி குருசாமி உரையாற்றினார். அதன்வாயிலாகவே, “பசியோடு வந்து, பசியோடு படித்து, பசியோடு வீடு திரும்பும் குழந்தைகளுக்கு, பள்ளிகளிலேயே ஒருவேளை உணவு வழங்கப்படும் ” என, சென்னை மாகாணத்தின் அன்றைய மேயர் பி.டி. தியாகராஜனால் சென்னையிலுள்ள சேத்துப்பட்டு, கோரப்பாளையம் முதலிய பகுதிகளில் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் (Midday Meal Scheme) ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், இந்த மதிய உணவுத் திட்டமானது, மாணவர் ஒருவருக்கு வழங்கப்படும் உணவின் செலவானது ஒரு அணாவை மிஞ்சக்கூடாது என்ற நிபந்தனையுடன் நிறைவேற்றப்பட்டது.
மதிய உணவுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட பிறகு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்தது. ஆரம்பத்தில், இந்த திட்டமானது சென்னை மாகாணத்தில் மட்டும் செயல்படுத்தப்பட்டது. நாடெங்கிலும் செயல்படுத்த திட்டமிட்ட அரசு எண்ணியபோது, மாணவர் சேர்க்கை அதிகரித்ததால், உணவிற்கு ஆகும் செலவானது அதிகரித்தது. எனவே அன்றைய ஆங்கிலேய அரசானது இந்தத் திட்டத்தை கைவிடுமாறு ஆணை பிறப்பித்ததுடன் அதற்கான நிதியையும் நிறுத்தியதால், 1925 ஏப்ரல் 1 முதல் மதிய உணவுத் திட்டம் நிறுத்தப்பட்டது.
1925 ல் நிறுத்தப்பட்ட இந்த மதிய உணவுத்திட்டம் மீண்டும் காமராஜர் ஆட்சி காலத்தில் உயிர்பெற்றது. கல்வித்தரத்தை உயர்த்துவதற்கு திட்டம் வகுத்த போது கல்விக்கு தடையாக இருந்தது வறுமை.அந்த வறுமையை சிறிது ஒதுக்கி அந்த கல்வியை கொடுத்தால் அந்த வறுமையை கல்வியால் சரி செய்து விடலாம் என்பது காமராஜரின் திட்டம். இந்த திட்டம் தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. ஆனால் அரசுக்கு நிதிநெருக்கடி ஏற்பட்ட காரணத்தால், இதற்கு ஆகும் செலவில், 60 சதவீதம் அரசும், 40 சதவீதம் மக்களிடமும் பெறப்பட்டது.
காமராஜர் மறைவிற்கு பிறகு அந்த திட்டம் பரிணாம வளர்ச்சிக்கு ஏற்றார்போல் மெருகேற்றப்பட்டது. காரணம் அந்த காலகட்டத்தில் இந்தியாவில் அதிகபடியாக கோதுமையை வழங்கி வந்த நிலையில் அதையே பள்ளி குழந்தைகளுக்கும் உப்புமாவாக வழங்கப்பட்டது. ஒரு முறை எம்.ஜி.ஆர் பள்ளி குழந்தைகள் கோதுமை உணவை கீழே கொட்டுவதை கண்டு ,அரசு பணம் வீணாவதாக அறிந்தார். அப்போது உடனே அமைச்சரை அழைத்து “குழந்தைகளுக்கு நாம சாப்டுற மாதிரி சாப்பாடு போடணும்“ என்று உருவாகி வந்தது தான் சத்துணவு. அதாவது பசி போக்கிய ஒரு வேளை உணவை சத்தான உணவாக எம் ஜி ஆர் மாற்றினார்.
அதற்கு அடுத்தடுத்த மாற்றமாக கருணாநிதி ஆட்சியில் முட்டை சேர்க்கப்பட்டது. அந்த ஒரு முட்டை அடுத்து வந்த ஆட்சி காலங்களில் வாரம் இரண்டு முட்டை என மாறியது.
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த போது சத்துணவில் புதுமையாக கலவை சாதம், வாழைப்பழம் என அதிலும் புரட்சி ஏற்படுத்தினார். இப்போது அந்த சத்துணவு தரம் , மாணவர்களுக்கு கொடுக்கப்படும் முட்டை ஆகியவை கேள்விக்குறியாக உள்ளது.
பலரும் இதனை கேலி செய்தனர். பிள்ளைகளை உணவிற்காக கையேந்த வைக்கின்றனர், அவர்களை இந்த நிலைக்கு கொண்டு வந்தது யார் ? என ஆவேச பேச்சு பேசுகின்றனர். அன்றைய காலகட்டத்தில் கல்வி என்ற ஒன்று இவர்கள் தான் படிக்க வேண்டிய நிலை இருந்தது. அதனை மாற்றி கல்வியை சாமானியனுக்கு சொந்தமாக்கி, வறுமையை காரணம் காட்டியவர்களுக்கு கல்வியை இலவசமாக்கி இந்த சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பணியில் பலரும் பாடுபட்டுள்ளனர் என்பது மறுக்க, மறைக்க முடியாத உண்மை.




