இந்தியக் குடியரசில் நடைபெறும் தேர்தல்களில் மிக முக்கியமானது உள்ளாட்சித் தேர்தல். அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தமிழ்நாட்டில் கடந்த 19-ம் தேதி வாக்குப்பதிவுடன் ஆரம்பித்து, பிப்ரவரி 22 தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதுடன் முடிவடைந்தது. பெண்களுக்கு 50% ஒதுக்கீட்டுடனும், அது குறித்த பெரும் எதிர்பார்ப்புடனும் நடந்து முடிந்திருக்கும் இந்தத் தேர்தலில், பல பெண்களின் வெற்றி ஆச்சர்யப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. குறிப்பாக, இளம்பெண்கள், கல்லூரி மாணவிகளின் தேர்தல் அரசியல் ஆர்வமும் வெற்றியும் இன்னும் பல பெண்களை அரசியல் பக்கம் திருப்பியுள்ளது என்றே கூறலாம்.
அந்த வகையில், பலரின் பார்வையை ஆச்சர்யப் பார்வையாக்கிய ஒரு வெற்றி, திருச்சி மாவட்டம் துவாக்குடி நகராட்சி 5வது வார்டில் நிகழ்ந்துள்ளது. பொறியியல் இரண்டாம் ஆண்டு மாணவி சினேகா சுயேச்சையாகப் போட்டியிட்டு தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க, அ.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட், பா.ஜ.க, தே.மு.தி.க, நாம் தமிழர் என முக்கிய கட்சியின் வேட்பாளர்கள், இரண்டு சுயேச்சை வேட்பாளர்கள் என்று அனைவரையும் டெபாசிட் இழக்க வைத்து தன்னுடைய வெற்றியை மாநிலமே திரும்பிப் பார்க்கும் வகையில் பெரிதாகப் பதிவு செய்துள்ளார்.தான் வாழும் பகுதிக்கு தன்னால் முடிந்த நன்மை செய்ய எண்ணி தன்னுடைய கல்லூரிப் பருவத்திலேயே அரசியலுக்குள் அடியெடுத்து வைத்திருக்கும் சினேகாவை சந்தித்துப் பேசினோம்.
என் அப்பாதான் எனக்குப் பெரிய இன்ஸ்பிரேஷன். அவர் அரசியல் சார்ந்து எந்தப் பதவியும் வகிக்கலை என்றாலும், மக்களுக்கான சேவையில் ஈடுபட்டு வந்தார். சின்ன வயசுல இருந்தே அவர் செய்யும் சேவைகளைப் பார்த்தே வளர்ந்த எனக்கு, மக்கள் நலன் சார்ந்து இயங்க ஒரு பதவி இருந்தா இன்னும் அதிகமா மக்களுக்கு நன்மைகளைச் செய்திடலாமேனு தோன்றவே, தேர்தல்ல சுயேச்சையா நிற்க முடிவெடுத்தேன்
மக்கள் ஆதரவு எனக்கு நிறைய இருந்ததை பிரசாரம் மேற்கொண்டப்போ உணர முடிந்தது. இந்த மக்கள் என்னை நிச்சயமா வெற்றியடைய வைப்பாங்கனு அப்போவே நம்பிக்கை கிடைச்சிடுச்சு. ஆனா, என்னை எதிர்த்துப் போட்டியிட்ட முக்கிய கட்சிகளைச் சேர்த்த வேட்பாளர்களை டெபாசிட் இழக்க வைத்து, இப்படி ஒரு மாபெரும் வெற்றியை மக்கள் எனக்குத் தருவாங்கனு நினைக்கவே இல்லை” என்று நெகிழ்கிறார்.