• Thu. May 2nd, 2024

ஜூன் 4 வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்

Byவிஷா

Apr 9, 2024

தமிழகத்தில் தேர்தல் நடைமுறைகள் ஜூன் 4ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதசாஹ_ அறிவித்துள்ளார்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னையில் நேற்று பத்திரிகையாளர்களுககு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது..,
தமிழகத்தில் தேர்தல் நடைமுறை ஜூன் 4-ம் தேதி வரை அமலில் இருக்கும். ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு முடிந்த பிறகும் வாகன சோதனை தொடரும். எனவே உரிய ஆவணம் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்துச் செல்வதற்கான கட்டுப்பாடுகள் ஜூன் 4-ம் தேதி வரை தொடரும். தமிழகம் முழுவதும் இதுவரை தேர்தல் பறக்கும் படையால் ரூ.208 கோடி பணம், பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இவை உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்டவை ஆகும்.
இவற்றில் தமிழகம் முழுவதும் ரொக்கப் பணம் மட்டும் ரூ.88.12 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. ரூ.4.53 கோடி மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. தாம்பரத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.4 கோடி சிக்கியது தொடர்பாக சிறப்பு குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவித்து அவர்களும் விசாரணை நடத்தி வருகிறார்கள். ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக செலவின பார்வையாளர் விசாரணை அறிக்கையை சமர்ப்பிப்பார்.
அதன் பிறகு இதில் இந்திய தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும். இந்த பணம் யாருடையது யாருக்காக கொண்டு செல்லப்பட்டது என்கிற விவரங்களும் தேர்தல் ஆணையத்துக்கு தெரியப்படுத்தப்படும். தமிழகம் முழுவதும் இதுவரை 2 கோடியே 8 லட்சத்து 59 ஆயிரத்து 559 வாக்காளர்களுக்கு பூத் சிலிப்புகள் வழங்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *