• Sun. Sep 27th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

சோழவந்தானிலிருந்து வாடிப்பட்டி செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம்..,

ByKalamegam Viswanathan

Sep 27, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தானிலிருந்து வாடிப்பட்டி செல்லும் சாலை ஆங்காங்கே குண்டும் குழியுமாக காணப்படுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குறிப்பாக பசும்பொன் நகர் முல்லையாற்றுப் பகுதியில் உள்ள சாலையில் பெரிய பள்ளம் உள்ள நிலையில் அதன் வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். மேலும் இந்த இடத்தில் அபாயகரமான வளைவு ஒன்றும் உள்ள நிலையில் வாகனங்கள் வேகமாக வந்து திரும்பும்போது பள்ளத்தில் இறங்கி வாகன ஓட்டிகளுக்கு காயம் ஏற்படும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.

அதன் அருகில் 200 மீட்டர் தொலைவில் அரசு டாஸ்மாக் உள்ள நிலையில் சோழவந்தான் பகுதியில் இருந்து டாஸ்மாக்கிற்கு வரும் மது பிரியர்கள் அதிவேகமாக இரு சக்கர வாகனத்தில் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக இந்த பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். பொதுமக்கள் மற்றும் மது பிரியர்கள் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக அந்த பகுதியில் உள்ள பள்ளங்களை சீரமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த பள்ளமானது நீண்ட காலமாக இருப்பதாக கூறுகின்றனர். பள்ளத்தை சீரமைக்க வருபவர்கள் மணலை போட்டு மூடி சென்று விடுவதாகவும் சிறிய மழை பெய்தவுடன் மீண்டும் பள்ளம் ஏற்படுவதாகவும் நிரந்தர தீர்வாக சோழவந்தான் முதல் வாடிப்பட்டி வரை உள்ள சாலையை அகலப்படுத்தி சீரமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.