தேனி மாவட்ட எல்லை குமுளி அருகே வனப்பகுதியை ஒட்டிய குடியிருப்பு பகுதியான உப்புத்தரை ஆலடி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாலையில் புலியையும் குட்டிப் புலியையும் கண்டதாக அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்பு வாசி ஒருவர் தெரிவித்தார். இதே போல் அடுத்த நாள் காலையில் புலிக்குட்டியை பார்த்ததாக சிலர் வனத்துறையினரிடம் தெரிவித்தனர். இது அடுத்து ரேஞ்சர் ரதிஷ் தலைமையில் அப்பகுதியில் நேற்று முன்தினம் கண்காணிப்பு கேமரா நிறுவப்பட்டது. இந்நிலையில் இன்று கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த வனத்துறையினருக்கு ஆச்சரியம் காத்திருந்தது. புலி நடமாட்டத்தை கண்காணிக்க வைத்திருந்த கேமராவில் காட்டுப் பூனை ஒன்று பதிவாகி இருந்தது. அதைத்தொடர்ந்து சில தெரு நாய்களும் கேமராவில் பதிவாகி இருந்தது. இந்தக் காட்சிகளை பார்த்த பின்பு வனத்துறையினரும் அப்பகுதி குடியிருப்பு வாசிகளும் நிம்மதி அடைந்தனர். இருப்பினும் பொதுமக்களின் அச்சத்தை போக்க இன்னும் ஒரு சில நாட்கள் அப்பகுதி கண்காணிப்பு கேமராவால் கண்காணிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.