ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் செல்வராணி (43). இவர் கடந்த 23ஆம் தேதி பிற்பகல் 2.20 மணி அளவில் சேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டியில் இருந்து நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது தனது கைப்பையில் இருந்த மணி பர்ஸ் அதனுடன் இருந்த 2 வங்கிகளின் ஏடிஎம் கார்டு, ரேஷன் கார்டு, பான் கார்டு மற்றும் 6,610 ரூபாய் பணம் ஆகியவற்றை தவற விட்டுள்ளார். பணத்தையும், தனது உடைமைகளையும் தவறவிட்ட அவர் இரண்டு நாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் அரசு பேருந்தில் செல்வராணி தவறவிட்ட பணம் மற்றும் உடமைகளை பயணி ஒருவர் கரூர் பேருந்து நிலைய காப்பாளர் அறையில் உள்ள பேருந்து நிலைய உதவியாளர் கலைராஜ் என்பவரிடம் ஒப்படைத்துள்ளார். அதைப் பிரித்துப் பார்த்த அவர் உள்ளே இருந்த எஸ்பிஐ ஏடிஎம் கார்டை எடுத்துக்கொண்டு, நேரடியாக வங்கிக்கு சென்று அதன் உரிமையாளர் குறித்த விவரங்களை வங்கி கேட்டுள்ளார். அதிகாரிகள் கொடுத்த தகவலின் அடிப்படையில், செல்வராணிக்கு செல்போன் மூலம் அழைப்பு விடுத்த கலைராஜ் தவறவிட்ட பொருட்களை கரூர் பேருந்து நிலையத்தை அணுகி பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து இன்று கரூர் பேருந்து நிலையத்திற்கு வந்த செல்வராணியிடம் பேருந்து நிலைய உதவி பொறியாளர் தேவராஜ் தலைமையில், கலைராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் செல்வராணி தவறவிட்ட பணம் மற்றும் உடைமைகள் உள்ளிட்ட பொருட்களை ஒப்படைத்தனர். இரண்டு நாட்களுக்கு முன்பு தவறவிட்ட தனது பணம் மற்றும் உடைமைகளை பத்திரமாக ஒப்படைத்த தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கு செல்வராணி நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார். மேலும், இனிமேல் பொருட்களை பத்திரமாக பார்த்துக் கொள்வதாக தெரிவித்தார்.