சேதுபாவாசத்திரம் அருகே பாசனக்குளத்துக்கு செல்லும் நீர் வரத்து வாய்க்காலை தனது சொந்தச் செலவில் தூர்வாரித் தந்த, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமாருக்கு கிராம பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், இரண்டாம்புளிக்காடு ஊராட்சிக்கு உட்பட்டு, மல்லிப்பட்டினத்தில் கள்ளிக்குளம் உள்ளது. இக்குளத்தின் மூலம் இப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வந்தது.
இந்நிலையில், வரத்து வாய்க்காலில் குப்பைகள் கொட்டப்பட்டதாலும், காலப்போக்கில் தூர்ந்து போனதாலும், கல்லணைக் கால்வாய் கிளை வாய்க்காலில் இருந்து கள்ளிக்குளத்துக்கு பாசனத்திற்கு தண்ணீர் கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சுமார் 15 வருடங்களாக விவசாயிகள் மழை பெய்தால் மட்டுமே பாசனம் செய்ய முடியும் என்ற நிலை இருந்தது.

இதுகுறித்து, இப்பகுதி பொதுமக்கள் அண்மையில் சட்டமன்ற உறுப்பினரிடம் எடுத்துக் கூறி, வரத்து வாய்க்காலை தூர்வாரித் தருமாறு கேட்டுக் கொண்டனர். இதையடுத்து தனது சொந்தச் செலவில், வாய்க்காலை தூர்வாரித் தருவதாக சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் உறுதியளித்தார்.
இதனைத் தொடர்ந்து ஆண்டிக்காடு திமுக கிளைச் செயலாளர் என்.மணிவண்ணன் மேற்பார்வையில், பொக்லைன் மூலம் வாய்க்கால் தூர்வாரி, தண்ணீர் வர வழிவகை செய்யப்பட்டது.

இதனால், கல்லணைக் கால்வாய் கிளை வாய்க்கால் மூலம் குளத்திற்கு தண்ணீர் கொண்டு வந்து பாசன வசதி மேற்கொள்ள முடியும் என்பதால், பாசனதாரர்கள், கிராமத்தினர், ஜமாத்தார்கள் சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.







; ?>)
; ?>)
; ?>)