மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் கிழக்கு ராஜகோபுரம் அருகே, சுவாமி சந்நிதிக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வீர வசந்தராயர் மண்டபம், 2018-ஆம் ஆண்டு ஏற்பட்ட பயங்கர தீ விபத்துக்குப் பிறகு சுமார் 8 ஆண்டுகள் கழித்து தற்போது முழுமையாக சீரமைக்கப்பட்டு மீண்டும் பக்தர்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது.

சுமார் 400 ஆண்டுகள் பழமையானதும், 7,000 சதுர அடி பரப்பளவும் கொண்ட இம்மண்டபம் நாயக்கர் கால கட்டிடக்கலையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக விளங்குகிறது. மண்டபத்தில் கல் தூண்கள், போதியல், சிம்ம உருவங்கள், உத்திரம், சிம்ம பீடம், கபோதகம் உள்ளிட்ட நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் இடம்பெற்றிருந்தன.
ரோஸ் பீட்டர் பாண்டியன்
இம்மண்டபத்தில் இருந்த விளக்குத் தோரணத்தின் வலத்தாங்கலில் ஒரு கல்வெட்டும் இடத்தாங்கலில் ஒரு கல்வெட்டும் இடம்பெற்றுள்ளன. டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய ஆய்வர்கள் நிகழ்த்திய கள ஆய்வுகளின்போது கண்டறியப்பட்ட இக்கல்வெட்டுகளுள் வலப்புறக் கல்வெட்டு 66 வரிகள் கொண்டுள்ளன. கி.பி. 1819ம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் 13ம் நாள் வெட்டப்பட்டுள்ள இக்கல்வெட்டு அக்காலகட்டத்தே மதுரை மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த ரோஸ் பீட்டரின் ஆணைக்கு இணங்க, மதுரை, மாடக்குளம் வட்டாட்சியர் சையது இசுமாயில் அனைத்து மக்களுக்கும் இவ்விளக்குத் தோரணம் அமைத்த வரலாற்றைக் கூறுவதாய் அமைந்துள்ளது.
விளக்கு சுடர் விடும் தோரணம்
பூசநட்சத்திரம் விளங்கிய பிராமாதி ஆண்டு ஆவணித்திங்கள் 30ம் நாள் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருமுன்னில் வீரவசந்தராயர் மண்டபத்தில் அமைக்கப்பட்ட இம்மகரதோரண விளக்குமாலையில் 616 விளக்குகள் உள்ளன எனக் கல்வெட்டுக் கூறுகிறது. இதற்கான வெண்கலம், மெழுக்கு வகையறா, சில்லறை சாமான், கூலி இவற்றிற்காக செலவழிக்கப்பட்ட தொகை 1500 பணம். சிறப்புடன் அமைக்கப்பட்ட இவ்விளக்குத் தோரணம் எந்நாளும் சுடர்விட்டு ஒளிரவேண்டும் என்றும் இதைக் காணும் மக்கள் மீனாட்சி சுந்தரேசுவரர் அருளைச் சிந்திக்கவேண்டும் என்றும் அக்கல்வெட்டு அன்புடன் வேண்டுகிறது.
மத நல்லிணக்க மண்டபம்
இத்தோரணத்தை அமைத்தவர்களாகச் சிலம்பம் மாம்பழ ஆசாரி மகன் முத்து வயிரவன் ஆசாரி, காமாட்சி ஆசாரி தம்பி பரிமளம் ஆசாரி, அம்மமுத்து ஆசாரி மகன் சொக்கலிங்கம் ஆசாரி ஆகியோரை இடப்புறக் கல்வெட்டு அறிமுகப்படுத்துகிறது. இவ்விளக்குத் தோரணத்தின் இரு தாங்கல்களையும் இணைக்கும் படிக்கட்டின் முகப்பில் கோயிலுக்கு வருவாரை வரவேற்பவர்களைப் போல் வலப்புறம் நான்கு ஆடவர்களும் இடப்புறம் ஐந்து ஆடவர்களும் வணக்க முத்திரையில் காணப்படுகின்றனர். இவர்தம் ஆடை, அணிகலன்கள் இவர்களைப் பெருந்தனக்காரர்களாகப் படம்பிடிக்கிறது.
இதில் குறிப்பிட வேண்டிய முக்கிய செய்தி என்னவென்றால் இந்த காலகட்டத்தில் மதுரையின் ஆட்சியராக திகழ்ந்தவர் ரோஸ் பீட்டர். அவர் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர். அவரது உத்தரவின் பேரில் இங்குள்ள விளக்குத் தோரணத்தை செய்து கொடுத்தவர் மாடக்குளம் வட்டாட்சியர் சையது இஸ்மாயில் ஆவார். சமய பேதமற்று ஆட்சியாளர்கள் இருந்தார்கள் என்பதற்கு வீர வசந்த ராயர் மண்டபம் வாழும் எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

2018-ல் ஏற்பட்ட பேரழிவு
2018 பிப்ரவரி 2-ஆம் தேதி நள்ளிரவு, மண்டபத்தில் செயல்பட்டு வந்த கடைகளில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாகப் பரவியதில் அங்கிருந்த கடைகள் முற்றிலும் எரிந்து நாசமானதுடன், கடும் வெப்பத்தால் மண்டபத்தின் மேற்கூரை, கருங்கல் தூண்கள் மற்றும் பக்கவாட்டுச் சுவர்கள் கடுமையாக சேதமடைந்து இடிந்து விழுந்தன. மண்டபத்தின் ஒரு பெரிய பகுதி முற்றிலும் சேதமடைந்தது.
இந்த விபத்து, கோயில் போன்ற பாரம்பரியக் கட்டிடங்களில் வணிகக் கடைகள் செயல்படுவது மற்றும் தீத்தடுப்பு, மின்சாரப் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.
பழமை மாறாமல் மறுசீரமைப்பு
தீ விபத்துக்குப் பிறகு, சேதமடைந்த மண்டபத்தை நவீன கட்டிடமாக மாற்றாமல், அதன் பாரம்பரியத் தன்மையும் சிற்பக்கலை நயமும் மாறாமல் மீண்டும் உருவாக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் பட்டணம் கிராமத்தில் உள்ள பாறைப் பகுதியிலிருந்து தேவையான கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு, மதுரை கூடல்செங்குளம் பகுதியில் உள்ள கோயிலுக்குச் சொந்தமான பணித்தளத்துக்கு கொண்டு வரப்பட்டன. அங்கு திருப்பூர் திருமுருகன் பூண்டியைச் சேர்ந்த ஸ்தபதி வி.பி. வேல்முருகன் தலைமையிலான சிற்பக் கலைஞர்கள் குழு, பழைய மண்டபத்தின் வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டு கற்களைத் தூண்கள் மற்றும் பல்வேறு கட்டமைப்புப் பகுதிகளாக செதுக்கினர்.
மொத்தம் சுமார் 65,000 கனஅடி கற்கள் பயன்படுத்தப்பட்டு, 79 கல் தூண்கள் வடிவமைக்கப்பட்டன. புனரமைப்புப் பணிகளுக்கு இடையில் கரோனா பொதுமுடக்கம், ஒப்பந்தப்புள்ளி நடைமுறைகளில் ஏற்பட்ட தாமதம் உள்ளிட்ட காரணங்களால் பணிகள் நீண்டன. இறுதியில் சீரமைப்புத் திட்டம் ரூ.38.30 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டது.
79-வது தூணுடன் நிறைவு
2026 ஜூன் 18-ஆம் தேதி மண்டபத்தில் 79-வது மற்றும் கடைசி தூண் நிறுவப்பட்டது. இதன்மூலம் நீண்ட ஆண்டுகளாக நடைபெற்ற புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்தன.
தொடர்ந்து ஆகஸ்ட் 30-ஆம் தேதி சிறப்பு பூஜைகள், யாகசாலை நிகழ்வுகள் மற்றும் மண்டபத் தூண்களுக்கு அபிஷேகம், ஆராதனைகள் நடத்தப்பட்டு மண்டபம் திறக்கப்பட்டது. இதையடுத்து 8 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த கிழக்கு ராஜகோபுர வாசலும் பக்தர்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டது.
வீர வசந்த ராயர்: நாயக்கர் கால அதிகாரி
தொல்லியல் துறையின் மூத்த அறிஞர் சொ.சாந்தலிங்கம் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அமைந்துள்ள வீர வசந்தராயர் மண்டபம் மிகவும் புகழ் பெற்ற ஒன்றாகும். இந்த மண்டபம் கட்டப்பட்ட காலம் கிபி 17ஆம் நூற்றாண்டு. ஆனால் அதற்கு முன்பாகவே கிழக்கு கோபுரம் கிபி 12ஆம் நூற்றாண்டு வாக்கில் முதலாம் சடையவர்மன் தொடங்கி அவரது தம்பி முதலாம் சுந்தரபாண்டியன் அவருக்குப் பிறகு வந்த இரண்டாம் சுந்தரபாண்டியன் அதை கல்காரம் வரை கட்டுவித்து முற்றுவித்தார்கள். இதற்கான கல்வெட்டுச் சான்றுகளும் அந்த மண்டபத்திலேயே உள்ளன. இதனாலையே கிழக்கு கோபுரத்திற்கு சுந்தரபாண்டியன் கோபுரம் அவனிவேந்தராமன் திருக்கோபுரம் என்ற பெயரால் வழங்கப்படுகிறது. அக்கோபுரத்தின் மேற்கு புறம் கட்டப்பட்ட மண்டபம் தான் வீர வசந்தராயர் மண்டபம். அதனை கட்டியவர் நாயக்கர் காலத்தில் இருந்த ஒரு அதிகாரியாக இருக்கக்கூடும்.
சதா சேவை கல்வெட்டுகள்
இந்த மண்டபம் ஒரே கல்லால் ஆன பல தூண்களைக் கொண்டதாகும். அத்தூண்கள் அனைத்தும் சுமார் 18 அடியில் இருந்து 20 அடி உயரம் கொண்டதாக உள்ளன. இரண்டு பக்கங்களும் உள்ள தூண்களை இணைப்பதற்கான கல்பலகைகளும் அமைக்கப்பட்டன. அந்தத் தூண்களில் ஒரு சிலவற்றில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அவற்றையெல்லாம் சதா சேவை கல்வெட்டுகள் என்று குறிப்பிடலாம். நிரந்தரமாக இந்த கோவிலை நான் வணங்கி வருகிறேன் என்று பக்தர்கள் குறிப்பிடும் கல்வெட்டுகளுக்கு பெயர்தான் சதா சேவை. அதில் தங்களது உருவத்தையும் அவர்கள் செதுக்கி வைத்துள்ளனர். நல்ல வேளையாக இக்குறிப்பிட்ட கல்வெட்டுகள் எவையும் தீ விபத்தில் சேதம் அடையவில்லை. இன்றும் அப்படியே உள்ளன. தீ விபத்திற்கு பிறகு பழமை மாறாமல் மறு கட்டமைப்பு செய்ய வேண்டும் என்பதற்காக தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை கடந்து 8 ஆண்டுகளாக அரிதின் முயன்று நிறைவு செய்து இருக்கிறார்கள். 400 ஆண்டுகளுக்கு முன்னால் மன்னர் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த மண்டபத்தின் பழமையை மாற்றாமல் அப்படியே உருவாக்கக்கூடிய சிற்பிகள் என்றும் நம்மிடையே இருக்கிறார்கள் என்பது மிகப் பெருமைக்குரியது’ என்கிறார்.

குடமுழுக்குக்கு முன்னதாக மீண்ட வரலாற்றுச் சின்னம்
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் குடமுழுக்கு செப்டம்பர் 17-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக வீர வசந்தராயர் மண்டபம் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
2018-ல் தீயில் சிதைந்த மண்டபம், எட்டு ஆண்டுகால தொழில்நுட்பப் பணிகள், பாரம்பரிய சிற்பக்கலைஞர்களின் உழைப்பு மற்றும் கோயில் நிர்வாகத்தின் சீரமைப்பு முயற்சிகளுக்குப் பிறகு மீண்டும் எழுந்துள்ளது. நானூறு ஆண்டுகளைக் கடந்த வரலாறு தீயால் சிதைந்தாலும், அதன் கட்டிடக்கலை மரபு அழியவில்லை என்பதற்கு சாட்சியாக, வீர வசந்தராயர் மண்டபம் தற்போது மீண்டும் கம்பீரமாக காட்சியளிக்கிறது.








