• Mon. May 6th, 2024

மதுரையில் வலம் வரும் ‘குரங்கு குல்லா’ திருடர்கள் அட்டகாசம்

ByKalamegam Viswanathan

Jun 12, 2023

மதுரை கோவில் பாப்பாகுடி, பொதும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் வீடு புகுந்து திருடும் ‘குரங்கு குல்லா’ திருடர்களால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். ‘குரங்கு குல்லா’, டவுசர் அணிந்து வீதியில் அவர்கள் சகஜமாக நடமாடி வீடுகளுக்குள் நுழையும் சிசிடிவி., டிவி காட்சிகள் வெளியாகி பதற்றம் உண்டாகியுள்ளது.
சிக்கந்தர் சாவடி, கோவில் பாப்பாகுடி, பொதும்பு உள்ளிட்ட பகுதிகள் சமீப காலமாக விரிவாக்கம் பெற்று வருகின்றன. இங்கு நூற்றுக்கணக்கில் வீடுகள் கட்டப்பட்டு மக்கள் குடியேறி உள்ளனர். இந்தப் பகுதியில் கடந்த சில தினங்களாக ‘குரங்கு குல்லா’ அணிந்த திருடர்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது.
அங்குள்ள சத்யா நகர் பகுதியில் நுழைந்த திருடர்கள் அங்கு தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். அப்பகுதியில் வசிக்கும் டிரைவர் பன்னீர்செல்வம் என்பவரது மனைவி தவமணி (39), காற்றுக்காக கதவை திறந்து வைத்து வீட்டு ஹாலில் உறங்கியுள்ளார். அந்த வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள் அவரை மிரட்டி, 5 3/4 சவரன் தாலிச் சங்கிலியைத் திருடி சென்றுள்ளனர். இந்த திருட்டு நடந்த அதே சமயத்தில் ஏ.ஆர்., சிட்டி, ஆனந்தம் அவன்யூ உள்ளிட்ட பகுதிகளிலும் திருட்டு முயற்சி செய்துள்ளனர்.
சுமார் 10 பேர் கொண்ட கும்பலாக உள்ள இவர்கள் 3 பேர் வீதமாக பிரிந்து திருட செல்கின்றனர். வெவ்வேறு பகுதிகளை குறி வைக்கும் இவர்கள் கும்பலாகச் சென்று வெளியில் நோட்டமிடுகின்றனர். ஆளில்லாத வீடுகள் தவிர, ஆட்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு உள்ளேயும் தைரியமாக புகுந்து விடுகின்றனர். கையில் பட்டாகத்தி போன்ற ஆயுதங்களுடன் உலாவரும் இவர்கள், வீட்டுக்குள் உள்ளவரை தாக்கி கொள்ளை அடிக்கவும் வாய்ப்பு உள்ளது.


நேற்று கோவில் பாப்பாகுடி ஏ.ஆர்., சிட்டி பகுதியில் நுழைந்த இந்த கொள்ளையர்கள் அங்குள்ள வழக்கறிஞர் ஒருவரின் வீட்டில் கேட் ஏறி குதித்துள்ளனர். அங்கு சிசிடிவி கண்காணிப்பு கேமரா இருப்பதை தாமதமாக பார்த்த நபர்கள் அதனையும் அடித்து நொறுக்கி உள்ளனர். பின்னர் வீட்டிற்கு உள்ளே குதித்து பூட்டை உடைத்துள்ளனர். சத்தம் கேட்டு விழித்த வீட்டின் உரிமையாளர் மாடி பால்கனியிலிருந்து சத்தம் போட்ட போது, அங்கிருந்து அவர்கள் தப்பி உள்ளனர். மேலும், கோபத்தில் அவர் மீது கற்களையும் வீசி சென்றுள்ளனர். அப்பகுதியில் நேற்று ஓர் இரவில் மட்டுமே நான்கு வீடுகளில் இதே போல் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.
பிடிபட்டால் தப்பிக்க உடம்பில் எண்ணெய் மற்றும் மண்சேறு பூசியபடி இவர்கள் உலா வருகின்றனர். மேலும் கைகளில் கிளவுஸ், தலையில் குரங்கு குல்லா, டவுசர் அணிந்தபடி வருகின்றனர். இந்த ‘குரங்கு குல்லா’ திருடர்களால் மக்கள் பீதியில் உள்ளனர். கடந்த ஆண்டு இதே போன்ற நபர்கள் பொதும்பு உள்ளிட்ட பகுதிகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர். தற்போது மீண்டும் குரங்கு கொள்ளா திருடர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.
போலீசார் தனிப்படை அமைத்து இவர்களை கண்டுபிடித்து ஏதேனும் பெரிய அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பாக தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *