• Sun. May 12th, 2024

ஆலாந்துறை பள்ளியில் ஓவிய ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம்- DYFI, SFI உட்பட பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

BySeenu

Dec 26, 2023

கோவை ஆலாந்துறை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலை பள்ளியில் ராஜ்குமார் என்பவர் ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு அவர் அப்பள்ளியில் தேசிய கீதம் பாதியில் நிறுத்தப்பட்டதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அப்பள்ளியில் பயிலும் மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாகவும் இது குறித்து தலைமை ஆசிரியர் மற்றும் சக ஆசிரியர்களிடம் தெரிவித்த பொழுது அதனை மூடி மறைத்து விட்டதாக அவர் தெரிவித்திருந்தார். பின்னர் இதனை உரிய அதிகாரிகளிடமும் காவல் துறையினரிடமும் தெரிவித்த பின்பு அப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

அதனைத் தொடர்ந்து சக ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் போக்சோ வழக்கில் கைதான உடற்கல்வி ஆசிரியருக்கு ஆதரவளித்து பள்ளி மாணவர்களை கொண்டு சாலை மறியல் போராட்டத்தை மேற்கொண்டனர்.

இதனை அடுத்து ஓவிய ஆசிரியர் ராஜ்குமாரை திடீரென சஸ்பெண்ட் செய்து கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி உத்தரவிட்டார்.

தவறு செய்தவர்களை விட்டுவிட்டு தவறை சுட்டிக்காட்டிய நபரை சஸ்பெண்ட் செய்ததாக ராஜ்குமார்க்கு பல்வேறு அமைப்பினர் ஆதரவு அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு DYFI, SFI, AIDWA, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உட்பட பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள் ராஜ்குமாருக்கு ஆதரவு அளித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும், பள்ளிக் கல்வித்துறையும் “ஓவிய ஆசிரியர் ராஜ்குமார் இடை நீக்கத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும், ஆலாந்துறை அரசு பள்ளியில் நடைபெறும் சாதியப்போக்கு ஊழல் போன்ற செயல்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், மாணவி மீதான வன்முறையை மறைத்த ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *