• Fri. Mar 29th, 2024

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீதான வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு

சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீதான வழக்கை முழுமையாக ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.


கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் கடந்த ஆண்டு ஜூலை 18-ல் கிறிஸ்தவ இயக்கம் சார்பில் நடந்த பாதிரியார் ஸ்டேன்சுவாமி நினைவஞ்சலிக் கூட்டத்தில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசியது சர்ச்சைக்குள்ளானது.

பின்னர், பிரதமர், மத்திய உள் துறை அமைச்சர் மற்றும் தமிழக அமைச்சர்கள், எம்எல்ஏக்களையும், பாரதமாதாவையும் கடுமையாக விமர்சித்துப் பேசியதாக ஜார்ஜ் பொன்னையா மீது அருமனை போலீஸார் 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.


இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஜார்ஜ் பொன்னையா, உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல்செய்தார். அதில், முறையாக போலீஸ் அனுமதி பெற்று கூட்டம்நடந்தது. எனது பேச்சின் குறிப்பிட்ட பகுதிகள் தவறான புரிதலைஏற்படுத்தும் வகையில் பரப்பப்பட்டுள்ளது. அதற்கு வருத்தம் தெரிவித்து சமூக வலை தளங்களில் வீடியோ வெளியிட்டேன். உடல் நலக்குறைவு, வயது முதிர்வு காரணமாக என் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: பஞ்சபூதங்களான நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பை மக்கள் புனிதமாக பார்க்கின்றனர். நிலத்தை பூமித்தாயாக மக்கள் வணங்கி வருகின்றனர்.


மனுதாரர் கூட்டத்தில் பேசும்போது பூமித்தாயை அவதூறாகப் பேசியுள்ளார். இந்து மதத்தினரின் மத நம்பிக்கையைத் தவறாகப் பேசியுள்ளார். இரு மதங்களுக்கு இடையில் மோதலையும், பிரிவினையையும் ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.


கன்னியாகுமரி மாவட்டம் பிற மாவட்டங்களைப் போல் இல்லை. மத பதற்றமான பகுதியாகும். அங்குநிலவும் அமைதியான சூழலை தொடர்ந்து பாதுகாக்க வேண்டும்.மத பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் பேசக் கூடாது. அம்பேத்கர் இந்து மதத்தை கடுமையாக விமர்சனம் செய்ததாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அம்பேத்கர் தலைவர். தலைவர்களையும், மதச்சார்பு உள்ளவர்களையும் ஒன்றாகப் பார்க்கக்கூடாது.


மனுதாரர் மீதான இபிகோ 269, 143, 506 (1) மற்றும் தொற்று நோய்பரவல் தடுப்பு சட்டப்பிரிவு 3-ன் கீழ்வழக்கு பதிவு செய்தது செல்லாது. இதனால் இப்பிரிவுகள் ரத்து செய்யப்படுகின்றன. மத நம்பிக்கையைச் சீர்குலைத்தல், இருபிரிவினர் இடையே மோதலை உருவாக்குதல், பிரிவினையைத் தூண்டுதல் ஆகிய குற்றங்களுக்காக இபிகோ 295 (ஏ), 153 (ஏ) மற்றும் 505 (2) பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்தது செல்லும். இப்பிரிவுகளை ரத்து செய்ய முடியாது.


சமீபத்தில் உலகம் தென்னாப்பிரிக்க நிறவெறி எதிர்ப்புத் தலைவர் டெஸ்மண்ட் டூட்டுவை இழந்து வாடியது. அது குறித்து கோபாலகிருஷ்ண காந்தி எழுதிய இரங்கல் செய்தியை மனுதாரர் படிக்க வேண்டும் என விரும்புகிறேன். ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். கிறிஸ்தவத்துக்கு எதிரான செயல்களைச் செய்ததற்காக இறுதித் தீர்ப்பு நாளின்போது மனுதாரரை கடவுள் கண்டிப்பார் என கருதுகிறேன். இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *