• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

கழிப்பிடத்தை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியர் தலைமறைவு

பெருந்துறை அருகே அரசு பள்ளியில் கழிப்பிடத்தை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியர்தலைமறைவாகி விட்டார் .போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

பெருந்துறை ஒன்றியம் துடுப்பதி ஊராட்சி பாலக்கரையில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 35 மாணவ- மாணவிகள் இங்கு படித்து வருகின்றனர். பள்ளியில் 2 கழிப்பறைகள் உள்ளன. அதில் ஒன்றை மாணவ- மாணவிகளும், மற்றொன்றை ஆசிரியைகளும் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்தநிலையில் பள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவனுக்கு திடீரென கடந்த 21-ந் தேதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அந்த மாணவரிடம் டாக்டர் பேசியபோது, தான் பள்ளியின் கழிப்பறையை சுத்தம் செய்ததாகவும், அப்போது கொசு கடித்ததாகவும் கூறியுள்ளான்.
மாணவன் சொன்னதை கேட்டு பதறிப்போன அவனுடைய தாய் இதுகுறித்து ஈரோடு கலெக்டரிடம் புகார் மனு அளித்தார். இதையடுத்து கலெக்டர் இதுபற்றி விசாரணை நடத்த கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி நேற்று பெருந்துறை கல்வி மாவட்ட அலுவலர் தேவிசந்திரா, உதவி கல்வி அலுவலர் தனபாக்கியம் ஆகியோர் சம்பந்தப்பட்ட பாலக்கரை பள்ளிக்கு விசாரணை நடத்த சென்றனர். விசாரணையில் பள்ளியில் படிக்கும் மாணவர்களை தலைமை ஆசிரியை கழிப்பறை சுத்தம் செய்ய வைத்தது தெரிந்தது. மேலும் அதிகாரிகள் விசாரணை நடத்த வரும்போது தலைமை ஆசிரியை பணிக்கு வராமல் தலைமறைவாகி விட்டதாகவும் தெரிகிறது.
இதற்கிடையே அதிகாரிகள் விசாரணை நடத்த வந்ததை அறிந்த மாணவர்களின் பெற்றோரும், அப்பகுதி மக்களும் பள்ளியில் திரண்டுவிட்டார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் கழிப்பறையை சுத்தம் செய்ததால் கொசு கடித்து காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவனின் தாய் இதுகுறித்து பெருந்துறை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியை மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள். இதற்கிடையில் மாணவர்களை கொண்டு கழிப்பறையை சுத்தம் செய்த தலைமை ஆசிரியை பணிஇடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக தொடக்க கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.