தமிழகத்தில் 892 மருத்துவ படிப்புகளுக்கான இடங்கள் காலியாக உள்ளன.
மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் உள்ள இடங்களில் 15 சதவீதம் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன. கடந்த 2020-ம் ஆண்டு வரை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் அகில இந்திய கலந்தாய்வு 2-வது சுற்று முடிவில் நிரப்பப்படாவிட்டால், அந்தந்த மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கிவிடும். ஆனால் இந்த நடைமுறை கடந்த ஆண்டு (2021) மாற்றப்பட்டது. அதன்படி, மீதம் உள்ள இடங்கள் திருப்பி அனுப்பப்படாமல், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள், அகில இந்திய கலந்தாய்வு இறுதி சுற்று வரை நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது முடிந்திருக்கும் 2-வது சுற்று முடிவில், சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, மதுரை மருத்துவக் கல்லூரி உள்பட முதன்மையான அரசுக் கல்லூரிகளில் 345 எம்.பி.பி.எஸ். இடங்கள் காலியாக உள்ளன.
இதுதவிர, நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 318 இடங்கள், என்.ஆர்.ஐ. பிரிவில் 201 இடங்கள், மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் 24 இடங்கள், இ.எஸ்.ஐ.சி. கல்லூரியில் 4 இடங்கள் என மொத்தம் 892 இடங்கள் காலியாக இருக்கின்றன. இன்று மாலை 5 மணிக்குள் கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய்து சேராதவர்களின் இடங்கள் காலியிடமாக அறிவிக்கப்படும். அந்தவகையில், எவ்வளவு காலியிடங்கள் இருக்கும்? என்ற விவரம் தெரியவரும். அந்த இடங்களும் இறுதி சுற்று மூலம் நிரப்பப்படும்.