• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பஞ்சாபில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் அரசியல் குழப்பம்!..

Byமதி

Oct 3, 2021

பஞ்சாப் அரசியலில் தொடர்ந்து குழப்பமான சுழல் நீடித்து வருகிறது. கட்சியில் ஏற்ப்பட்ட பூசலால் அமரிந்தர் சிங் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், பஞ்சாபின் புதிய முதல்வராக சரன்ஜித் சி்ங் சன்னி நியமிக்கப்பட்டார். இதற்கிடையில் அமரிந்தர் சிங் விரைவில் பாஜகவில் இணைவார் என்று பேச்சு எழுந்தது. ஆனால் அதை மறுத்த அமரிந்தர் சிங், ‘நான் காங்கிரஸில் தொடர்ந்து இருக்க மாட்டேன். அதேசமயம் பாஜகவில் சேர மாட்டேன்’ என்று தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார். இதனால் பஞ்சாப் காங்கிரஸ் கட்சியில் அரசியல் குழப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனிடையே அமரிந்தர் சிங்கின் பதவி விலகல் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறுகையில், அமரிந்தர் சிங்கை முதல்வர் பதவியில் இருந்து சோனியா நீக்கவில்லை என்றும் முதல்வரை மாற்ற வேண்டும் என்று 78 எம்எல்ஏ.க்கள் தலைமைக்கு கோரிக்கை கடிதம் எழுதியிருந்தனர் என்றும் ஒரு முதல்வர் 79 எம்.எல்.ஏ.க்களில் 78 எம்.எல்.ஏ.க்களின் நம்பிக்கையை இழந்த பிறகு எப்படி அவர் அப்பதவியில் இருக்க முடியும்? என்று விமர்சித்துப் பேசினார்.

இந்த நிலையில், ரன்தீப் சிங் சுர்ஜேவாலாவின் விமர்சனத்துக்கு பதிலளித்துப் பேசிய அமரிந்தர் சிங், ‘’காங்கிரஸ் கட்சி முழுவதும் குழப்பமான நிலையில் உள்ளது. கட்சித் தலைமைக்கு 43 எம்.எல்.ஏ.க்கள் கடிதம் எழுதியதாக மாநில காங்கிரஸ் பொறுப்பாளா் ஹரீஷ் ராவத் கூறிய நிலையில், 78 எம்.எல்.ஏ.க்கள் என்று ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறுகிறார். அடுத்து எனக்கு எதிராக 117 எம்.எல்.ஏ.க்கள் கடிதம் எழுதியதாக கூறுவார்கள். பஞ்சாப் மாநில காங்கிரஸில் எழுந்த உள்கட்சிப் பூசலை சரிவர கையாளத் தவறியதை மறைப்பதற்கு அபத்தமான பொய்களை கட்சித் தலைவா்கள் கூறி வருகின்றனர்’’ என்றார்.