• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிய கவர்னர்..!

Byவிஷா

Feb 25, 2023

சென்னையில் இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்களுக்கு தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி இரு அணிகளுக்கும் சேர்த்து 18 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையை வழங்கினார்.
இந்தியா மற்றும் இலங்கை மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் சென்னை ராமச்சந்திரா பல்கலைக்கழக மைதானத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச 20 ஓவர் தொடர் கிரிக்கெட் போட்டி நடந்தது. இந்த போட்டியில் இலங்கை அணி முதலிடத்தையும், இந்திய அணி 2-வது இடத்தையும் பிடித்தது. இந்த போட்டியில் பங்கேற்ற மாற்றுத்திறனாளி வீரர்கள் சென்னை ராஜ்பவனில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்தனர்.
இரு அணிகளைச் சேர்ந்த 18 வீரர்களுடன் கவர்னர் கலந்துரையாடினார். அப்போது வீரர்கள் தங்களது குடும்ப பின்னணி, தாங்கள் எதிர்கொள்ளும் சவாலான வாழ்க்கை சூழல் குறித்தும் வறுமை நிலையிலும் விளையாட்டு மீது இருந்து வரும் ஆர்வத்தையும் எடுத்துக்கூறினர். சில வீரர்கள், தங்களுக்கு அன்றாடம் 3 வேலை சாப்பாடு கூட கிடைப்பது நிச்சயமில்லாத நிலையில் இருப்பதாக வேதனையுடன் தெரிவித்தனர். தற்போது வீட்டுக்கு போனால் அங்கு சாப்பாடு இருக்குமா? என்பது கூட கேள்விக்குறியான ஒன்று தான் என கூறினர்.
‘கடந்த 15 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வருகிறோம். இத்தனை ஆண்டுகளில் மாநில கவர்னர் யாரும் எங்களை அழைத்து எங்களது குறைகளை கேட்டதில்லை. ஒரு மாநிலத்தின் கவர்னரை சந்திப்பது இதுதான் முதல் முறை’ என மாற்றுத்திறனாளி வீரர் ஒருவர் தெரிவித்தார்.
இரு அணி வீரர்களின் வாழ்க்கை சூழலை எண்ணி கவர்னர் உணர்ச்சி வசப்பட்டார். உடனடியாக அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கவர்னர் நிதியில் இருந்து முதலிடம் வென்ற இலங்கை அணிக்கு ரூ.10 லட்சமும், 2-ம் இடம் பிடித்த இந்திய அணிக்கு ரூ.8 லட்சமும் ஊக்கத்தொகையாக வழங்க உத்தரவிட்டார்.

கவர்னரின் அறிவிப்பால் நெகிழ்ச்சியடைந்த இந்திய, இலங்கை வீரர்கள் அவருக்கு நன்றி தெரிவித்தனர். ‘நீங்கள் புதிய உற்சாகத்துடனும், உத்வேகத்துடனும் செயல்பட்டு அவரவர் தாய்நாட்டுக்கு பெருமை தேடித் தரவேண்டும்’ என்று மாற்றுத்திறனாளி வீரர்களை கவர்னர் வாழ்த்தி அனுப்பிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் கவர்னரின் மனைவி லட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.