போதைக் காளான்…
என்ன செய்கிறது போலீஸ்?
கொடைக்கானல் மலையில் போதை காளான் ஆம்லெட், போதை காளான் ‘டீ ‘ஆகியவை கொடிகட்டி பறப்பதால் இளைஞர்கள் சீரழிந்து வருவதாகவும், மலைகளின் இளவரசி போதைகளில் இளவரசியாக மாறி வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் பகீர் தகவல்களை நம்மிடம் கூறினர்.
என்ன நடக்கிறது கொடைக்கானலில்?
கொடைக்கானல் நகருக்கு சென்றாலே வானரங்கள் ஆங்காங்கு நின்று வரவேற்கும். கிடு கிடுவென உயர்ந்த எழில் நிறைந்த மரங்கள். பள்ளங்கள் என உள்ளங்களில் சுண்டி இழுக்கும். விழி பிதுங்கும் உயரமான சிகரங்கள், வியக்க வைக்கும் அருவிகள், சிலிர்க்க வைக்கும் குளிர், சில்லென்ற நீரோடை என இயற்கை கொஞ்சும் சொர்க்கபூமி.
அற்புதக் காட்சிகள் நிறைந்த கொடைக்கானல் மலைக்கு செல்வது என்பது எல்லையில்லா கொள்ளை ஆசை. ஆனால் தற்போது போதை வஸ்துக்களின் வாசல் தளமாக கொடைக்கானல் மாறி வருவது வேதனையின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது.
மேல்மலை கிராமங்களான பூம்பாறை,கூக்கல், மன்னவனூர்,கிளாவரை உட்பட பல இடங்களில் இயற்கையாக விளைந்த போதை காளான் பறித்து அவற்றை பக்குவப்படுத்தி தூளாக்கி இளைஞர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக ஏராளமான இளைஞர்கள் கொடைக்கானலுக்கு படை எடுத்து வருகின்றனர். போதை காளானில் ஆம்லெட் போட்டவர்கள் ,தற்போது டீத்தூளுடன் கலந்து போதை காளான் ‘டீ’போட்டு வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் குவிந்து வருகின்றன.
இது குறித்து கொடைக்கானலைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் ,மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த மேற்கு மாவட்ட செயலாளராளருமான ஷேக் அப்துல்லாவிடம் அரசியல் டுடே சார்பில் கேட்டோம்:
”கோடைவாசஸ்தலமான கொடைக்கானலுக்கு அண்மைக்காலமாக இளைஞர்கள் சிலர் ‘மேஜிக் மஸ்ரூம்’ எனப்படும் போதைக் காளானைத் தேடி வருவது அதிகரித்துள்ளது. கொடைக்கானலில் அடர்ந்த வனப் பகுதியில் வளரும் இந்தக் காளான்களை, முன்பு விறகு எடுக்கச் செல்வோரிடம் கூறி, போதைப் பொருள் விற்பனையாளர்கள் எடுத்து வரச் செய்தனர்.
அவற்றை தங்களுக்குத் தெரிந்த சிலருக்கு மட்டுமே விற்பனை செய்து வந்தனர்.
நாளடைவில் ஏராளமானோர் போதைக்கு அடிமையாகிவிட்ட நிலையில், தற்போது விற்பனையாளர்களே மலைப் பகுதிகளில் தேடி அலைந்து, போதைக் காளானை பறித்துவரத் தொடங்கிவிட்டனர்.
தற்போது போதைக்கு அடிமையான பலர் சுற்றுலாப் பயணிகள் என்ற போர்வையில் கொடைக்கானலுக்கு அடிக்கடி வருவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.
சிறிய அளவில் இருக்கும் காளானின் எண்ணிக்கைக்கு ஏற்ப ரூ.500 வரை விற்பனை செய்யப்படுகிறது. தாங்கள் தங்கியிருக்கும் விடுதிகளிலேயே போதைக் காளான் எங்கு கிடைக்கும் என்று இளைஞர்கள் விசாரிக்கின்றனர். அனுமதியின்றி செயல்படும் தங்கும் விடுதிகள், பாதுகாப்பின்றி செயல்படும் குடில்களில் போதைக் காளான் விநியோகம் சர்வ சாதாரணமாக நடக்கிறது.
இந்த காளான் குறித்து சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல்களால், மேலும் பல இளைஞர்கள் இதைத் தேடி கொடைக்கானலுக்கு வருவது அதிகரித்துள்ளது.
போதைக் காளானை முட்டையுடன் சேர்த்து ஆம்லேட்டாக உட்கொள்கின்றனர். தற்போது தங்கும் குடில்களில் ‘ டீ’ த்தூளுடன் கலந்து போதை காளான் டீ வழங்கப்படுவதாக எங்களுக்கு தகவல் வருகிறது.
இதில் உள்ள ‘சைலோசின்’ என்ற வேதிப்பொருள் உட்கொள்பவர்களை மயக்க நிலைக்குக் கொண்டு செல்கிறது. இதனால் மாயத்தோற்றம் ஏற்பட்டு, போதையை அனுபவிக்கின்றனர். போதைக் காளான் விற்போர், வாங்குவோரை கைது செய்தாலும், அவர்களைத் தண்டிக்க முறையான சட்டப்பிரிவு இல்லை. இதனால் கைது செய்யப்பட்டோர் விரைவில் சிறையிலிருந்து வெளியே வரும் நிலைதான் உள்ளது.
போதைக் காளானை பறிக்கச் செல்வோரை கைது செய்ய வேண்டும்.
டிஎஸ்பிக்கள் அடிக்கடி மாற்றப்படுவதால் இந்த பணியில் தொய்வு ஏற்படுகிறது.
இது குறித்து போலீஸ் துறைக்கும் நாங்கள் பலமுறை தகவல் தெரிவித்துள்ளோம். சில நேரங்களில் நடவடிக்கை எடுக்கிறார்கள். பல நேரங்களில் கண் துடைப்பு நடவடிக்கையாக முடிந்து விடுகிறது” என விரிவாக விளக்கினார்.
இது குறித்து அரசியல் டுடே சார்பில் டிஎஸ்பி யுவபாரதியிடம் கேட்டோம்.
நான் பதவியேற்று தற்போது ஒரு வாரம் தான் ஆகிறது. கொடைக்கானலில் வெளிநாட்டினர், இளைஞர்களை அங்கு உள்ள மேஜிக் காளான் எனப்படும் போதை காளானை அதிகமாக ஈர்க்கிறது.
மேஜிக் காளானை தேடி வராதீங்க.. இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போதைகாளான் ஆம்லெட், டீ குறித்து கண்காணிக்கப்படும். திண்டுக்கல்
எஸ்.பி. உத்தரவின் பேரில் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா வரும் வெளிநாட்டவர்களாக இருந்தாலும் சரி, உள்ளூர் சுற்றுலாப்பயணிகளாக இருந்தாலும் சரி அவர்கள் மீது காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்
இது குறித்து திண்டுக்கல் எஸ்.பி.பிரதீப்பிடம் அரசியல் டுடே சார்பில் கேட்டபோது, “ போதை காளான் விற்பனையை கண்காணிப்பதற்கு தனி படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படையினர் மேல்மலைப்பகுதியில் தங்கும் சுற்றுலாப் பயணிகளை அங்கு சமைக்கப்படும் ஆம்லெட் மற்றும் தயாரிக்கப்படும் டீ அனைத்தையும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அப்படி போதை காளான் பயன்படுத்துவதாக இதுவரை தகவல் வரவில்லை. போதை காளான் டீ, போதை காளான் ஆம்லெட் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
போதை காளான் வழக்கில் இதுவரை 53 பேருக்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்” என்றார்.
இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக கொடைக்கானலில் போதை காளான புழக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.
போலீஸும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து உறுதியான விரிவான நடவடிக்கை எடுத்தால்தான் போதை காளானை ஒழிக்க முடியும்.
