• Thu. Apr 25th, 2024

சிறுபான்மையினருக்கு துணையாக திமுக அரசு நிற்கும்

Byகாயத்ரி

Dec 21, 2021

சிறுபான்மையின மக்களுக்கு என்றும் துணையாக திமுக அரசு இருக்கும் என சென்னை, சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில், கிறித்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெருவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், அன்பு ஒன்றுதான் வாழ்க்கையின் சட்டம். அத்தகைய சட்டப்படி தான் இந்த அரசு செயல்படும். அந்த உணர்வை ஊட்டும் விழாவாக இந்த கிறிஸ்துமஸ் விழா அமைந்திருக்கிறது என்று நான் பெருமையோடு சொல்ல விரும்புகிறேன் என தெரிவித்தார்.கிறித்துவர்கள் என்றோ சிறுபான்மையினர் என்றோ – ஒரு வித அடையாளச் சொல்லாகத்தான் நாம் அதனை பயன்படுத்துகிறோம். நாம் மொழியால் தமிழர்கள்தான். இனத்தால் தமிழர்கள்தான்.வழிபாடு என்பது அவரவர் விருப்பம். ஆனால் தமிழர்கள் என்பது பண்பாட்டுப் பிணைப்பு ஆகும்.

‘ஒரே வயிறு தாங்காத காரணத்தால் தனித்தனி தாய் வயிற்றில் பிறந்த தமிழ் சமுதாயத்தின் உடன்பிறப்புகள்தான் நாம். அந்த உணர்வோடுதான் நாம் அனைவரும் இங்கே கூடியிருக்கிறோம்.எல்லா மதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றன. கிறித்துவமும் திரும்பத் திரும்ப அன்பைத்தான் போதித்துக் கொண்டிருக்கிறது. ஒருவர் மற்றவர்களுடன் அன்பாக இருங்கள் என்பதுதான் அனைத்து மதங்களின் சாராம்சமாக இருக்கிறது. அத்தகைய எண்ணங்களை நாமும் ஆதரிக்கிறோம். அதனை நாம் விமர்சிப்பது இல்லை.
அன்பு என்பது சாதி பார்க்காது, மதம் பார்க்காது, மொழி பார்க்காது, இனம் பார்க்காது, நிறம் பார்க்காது, பால் பேதம் பார்க்காது. இத்தகைய அன்பை அடிப்படையாகக் கொண்ட எதுவும், யாரும் ஏற்கத்தக்கவர்கள்.

இதில் பேதம் பார்க்கும் யாரும் ஒதுக்கப்பட வேண்டியவர்கள். அத்தகைய மானுடச் சிந்தனை, மனிதாபிமான எண்ணம் தழைப்பதற்கு, கிறித்துவ நல்லெண்ண இயக்கம் போன்ற இயக்கங்கள் அடித்தளம் அமைத்து இன்றைக்கு தன்னுடைய பணியை சிறப்பாக நிறைவேற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்து நான் பாராட்டுகிறேன், போற்றுகிறேன், வாழ்த்துகிறேன் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *